இலங்கை சென்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு
1 min read
C.P. Radhakrishnan receives enthusiastic welcome on his visit to Sri Lanka
19.4.2026
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை சென்றார். கொழும்பு விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கைக்கு தான் பொறுப்பேற்ற பின்னர் முதல் தடவை அவர் சென்றுள்ளார்.
இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே, பிரதமர் ஹரினி அமரசூ ரியா, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரை சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசுகிறார். இதேபோல இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்து பேச உள்ளார்.
தனது 2 நாள் பயணத்தின்போது எரிசக்தி, சமுதாய மேம்பாடு, பிராந்திய வளர்ச்சி, மீனவர் நலன் உள்பட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையேயும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு, இந்தியாவின் துணை ஜனாதிபதி 26 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போதுதான் சென்றுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த கிரிஷன் காந்த், இலங்கையின் பெண் பிரதமராக இருந்த ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் இறுதி சடங்கில் பங்கேற்க சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றார். இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் 3 நாள் பயணமாக இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியா இந்தியா வந்தார். இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் நல்லுறவு நீடித்து வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 4 நாள் பயணமாக அனுர குமார திசநாயகே இந்தியா வந்தார் என்பது குறிப்பிடதக்கது.