மணிப்பூரில் வன்முறை; 5 நாள் முழு அடைப்பு
1 min read
Violence in Manipur; 5-day complete shutdown
20/4/2026
கடந்த ஏப்ரல் 7-ந் தேதி, மணிப்பூரின் விஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது மலைப் பகுதியில் இருந்து வெடிகுண்டு வீசப்பட்டது.
இந்தத் தாக்குதலில் 5 வயது சிறுவன் மற்றும் 5 மாதக் குழந்தை என பலியாகினர். இது மணிப்பூர் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என போராட்டங்கள் நடந்து வருகிறது.
குண்டுவீச்சை கண்டித்து நேற்று தொடங்கிய 5 நாள் முழு அடைப்பு போராட்டத்தால் அம்மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் சந்தைகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி தீப்பந்தங்களுடன் இரவு நேரப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக மீரா பைபிஸ் என்ற அமைப்பைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர்.
கக்சிங் மாவட்டம் உள்ளிட்ட சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்கப் போலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 23க்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் இன்னும் தீவிரப்படுத்தப்படும் எனப் போராட்டக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.