பெண்கள் மசூதிக்கு செல்ல தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் தகவல்
1 min read
There is no ban on women going to mosques – Muslim Personal Law Board informs Supreme Court
24.4.2026
பெண்கள் மசூதிகளுக்குள் நுழைய எந்தத் தடையும் இல்லை என அகில இந்திய மசூதி தொழிலாளர் சட்ட வாரியம் (AIMPLB) சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
முன்னதாக சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட்டில் அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. அத்துடன் பிற வழிபாட்டு தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு குறித்து தொடரப்பட்ட வழக்குகளும் இந்த அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த வழக்கில் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் சார்பில் மூத்த வக்கீல் சம்ஷாத் ஆஜராகி வாதிட்டார். அப்போது, தொழுகைக்காக பெண்கள் மசூதிக்கு செல்வதை இஸ்லாம் தடுக்கவில்லை என தெரிவித்தார். இது குறித்து அவர் வாதிடுகையில், “இஸ்லாத்தின் அனைத்துப்பிரிவுகளின் கீழும், பெண்கள் சில ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு மசூதிகளுக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்று நாங்கள் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். அங்கு அவர்களுக்கு எங்கும் எந்தத் தடையும் இல்லை. மசூதியில் கருவறை எதுவும் இல்லை. எனினும் அவர்கள் வீட்டிலேயே தொழுவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது’ என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அமானுல்லா, ‘ஒரு வீட்டில் உள்ள அனைவரும் மசூதிக்குச் சென்றால், குழந்தைகளை யார் கவனித்துக் கொள்வார்கள்? என்பதே இதற்கு காரணம்’ என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து சம்ஷாத் வாதிடுகையில், “அத்தியாவசிய மத நடைமுறை (ERP) கோட்பாடு, இஸ்லாத்தின் பின்னணியில் நீதிமன்றங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இஸ்லாம் என்பது, செய்ய வேண்டியவை என்ன மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்து விரிவான விவரங்களைக் கொண்ட, மிகவும் ஆழமாக எழுதப்பட்ட ஒரு மார்க்கம் என்றும் நீதிபதிகள் அமர்வின் முன் வாதிடப்பட்டது.