June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

ஜம்மு-ஸ்ரீநகர் ‘வந்தே பாரத்’ ரெயில் – அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்

1 min read

Jammu-Srinagar ‘Vande Bharat’ train – Ashwini Vaishnav inaugurates

30.4.2026
மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே இயக்கப்படும் 20 பெட்டிகள் கொண்ட ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்களின் பயன்பாட்டிற்காக இந்த ரெயிலின் சேவைகள் மே 2-ந்தேதி தொடங்கப்பட உள்ளது.

ஸ்ரீநகருக்கும், ஜம்முவுக்கும் இடையேயான நேரடி ரெயில் சேவைகள், இரண்டு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தி, அனைத்து பருவ காலங்களிலும் பயன்படக்கூடிய ஒரு தரைவழிப் போக்குவரத்து இணைப்பையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “இந்த ‘வந்தே பாரத்’ ரெயில், ஜம்மு தாவியில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கி, பள்ளத்தாக்கின் சவாலான புவியியல் நிலப்பரப்புகளை இணைத்துக்கொண்டு ஸ்ரீநகர் வரையிலான பாதையில் பயணிக்கும். அதே நேரத்தில், ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவை நோக்கி ஒரு ரெயில் புறப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிறகு பேசிய மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், “ஜம்மு-ஸ்ரீநகர் இடையே ‘வந்தே பாரத்’ ரெயில் சேவை தொடங்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இவ்வளவு உயரமான இடத்தில் ஒரு ரெயில் இயக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த ரயில், பழங்கள், பொருட்கள் மற்றும் இதர அனைத்து சரக்குகளை எளிதாக கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும்.

ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் அனைத்து விதமான வானிலைகளிலும் இயக்கப்படும். மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் குளிரிலும் இந்த ரெயிலை இயக்க முடியும். சிமெண்ட், கார்கள் மற்றும் பைக்குகள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்ல ரெயில் சேவை பயன்படுத்தப்பட்டு வருவதால், அது காஷ்மீர் மக்களுக்குப் பயனளித்துள்ளது” என்று கூறினார்.

சுமார் 327 கி.மீ. நீளமுள்ள ஜம்மு-கத்ரா-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரெயில் பாதையில் ஏற்கனவே பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 43,780 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த ரெயில் பாதையில், 119 கி.மீ. நீளத்திற்கு 36 சுரங்கப்பாதைகளும், 943 பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதே போல், இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைக்கும் ரெயில்வே பாதுகாப்புப் படை(RPF) கமாண்டோக்கள் உட்பட 21 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய ரெயில்வே பாதுகாப்புப் படையின் முதன்மை தலைமை பாதுகாப்பு ஆணையர் பங்கஜ் கங்வார் கூறுகையில், “ரெயில் பாதையையும், ‘வந்தே பாரத்’ ரெயிலையும் பாதுகாப்பதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட பாதுகாப்பிற்காக, நாங்கள் ‘ஒன்று பிளஸ் இருபது'(One Plus Twenty) என்ற காவலர் அமைப்பை பணியில் அமர்த்தியுள்ளோம். ஒரு ஆய்வாளர் இந்த குழுவிற்கு தலைமை தாங்குவார். இக்குழுவில், வழித்தடம் முழுவதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 8 ரெயில்வே பாதுகாப்புப் படை (RPF) கமாண்டோக்களும் அடங்குவர். அவர்களிடம் நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நோக்கங்களுக்காக, ரெயில்வே நிர்வாகம் ரெயிலுக்கு முன்னால் ஒரு முன்னோட்ட வாகனத்தையும் இயக்கும். அது காலையில் முன்கூட்டியே சென்று, வழித்தடத்தில் உள்ள குறைபாடுகளை சரிசெய்யும். மேலும், ஒவ்வொரு 2 கிலோ மீட்டருக்கும் காவல் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு தகவல் கிடைத்தாலும், அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவார்கள்.

சுரங்கப்பாதை பாதுகாப்பை பொறுத்தவரை, பொறியியல் குழுக்கள் மற்றும் ரெயில்வே காவல்துறையினரை உள்ளடக்கிய சுரங்கப்பாதை கட்டுப்பாட்டு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. தீ அல்லது ஊடுருவல் போன்ற எந்தவொரு அசாதாரணமான செயலையும் கண்டறிய சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. சுரங்கப்பாதைகளின் இரு முனைகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக, தப்பிக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடம் முழுவதும் முழுமையான மற்றும் வலுவான பாதுகாப்பு உள்ளது. மேலும், காஷ்மீர் மக்களின் அன்பும் ஆதரவுமே இந்த சேவையின் பாதுகாப்பிற்கு ஒரு வலுவான உத்தரவாதமாக அமைகிறது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும், மாதா வைஷ்ணோ தேவி ஆலயத்தின் அடிவார முகாமான கத்ராவிற்கும் இடையே உள்ள கத்ரா-ஸ்ரீநகர் ரெயில் பாதையில் இயங்கும் ‘வந்தே பாரத்’ ரெயில்களின் பாதுகாப்பிற்காக, கோராஸ் (CORAS – commandos for railway safety) என அறியப்படும் RPF கமாண்டோக்கள் கடந்த ஆண்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *