June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

மும்பையில் ரூ.1745 கோடி போதைப்பொருள் பறிமுதல்

1 min read

Drugs worth Rs. 1745 crore seized in Mumbai

1/5/2026
நாடு முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிர மாநிலம் மும்பை துறைமுகம் அருகே போதைப்பொருள் கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒரு இடத்தில் கொக்கைன் ரக போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 349 கிலோ எடையுள்ள இந்த போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.1745 கோடி ஆகும். இவை ஒரு கண்டெய்னரில் சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்டு, தென் அமெரிக்காவில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த போதைப் பொருட்கள் டெல்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்வதற்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இது தொடர்பாக வெளிநாட்டினர் உள்பட போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின் போது மும்பை போலீசார் அஸ்வினி பால் என்ற முன்னாள் பார் நடனக் கலைஞரை கைது செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியுள்ளது.

போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினரை மத்திய மந்திரி அமித்ஷா பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், போதைப்பொருள் இல்லாத இந்தியாவை நோக்கிய பயணத்தில் இந்த மாபெரும் வெற்றி ஒரு மைல்கல். போதைப்பொருள் கும்பலை ஈவு இரக்கமின்றி ஒடுக்க நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பை வெளிக்கொணர அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையிலான அணுகுமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *