June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

மு.க.ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு – தி.மு.க.வால் ஓரம்கட்டப்பட்டவர்

1 min read

V.S. Babu, who defeated M.K. Stalin – was marginalized by the DMK

4.5.2026
சென்னையில் உள்ள நட்சத்திர தொகுதியான கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். 2011-ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பில் உதயமான இந்த தொகுதியில், ஆரம்பம் முதல் மு.க.ஸ்டாலினே வெற்றி வாகை சூடிவந்திருக்கிறார். ஆனால், இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வகையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் இருந்தே மு.க.ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து வந்தார். அவரை எதிர்த்து நின்ற த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றிருக்கிறார்.

யார் இந்த வி.எஸ்.பாபு என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழலாம். ஒரு காலத்தில், வி.எஸ்.பாபுவும், தி.மு.க.வில் இருந்தவர்தான். அதுவும் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார்.
2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கொளத்தூர் தொகுதி உதயமானபோது, அதில் மு.க.ஸ்டாலின் வேட்பாளராக களம் கண்டார். அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் வி.எஸ்.பாபு. ஆனாலும், அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை விட சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இதனால், தி.மு.க. தலைமை வி.எஸ்.பாபு மீது அதிருப்தியில் இருந்தது.
அந்த நேரத்தில், அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு வந்த சேகர்பாபு வசம் வடசென்னை தி.மு.க. சென்றது. கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட வி.எஸ்.பாபு, அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனாலும், அ.தி.மு.க.விலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்து வந்த வி.எஸ்.பாபு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

அவருக்கு மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது. முதல்-அமைச்சரை எதிர்த்து எப்படி வெற்றி பெற முடியும் என்று அவர் நினைக்காமல், களத்தில் பணியாற்றினார். தற்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றி வாகை சூடியுள்ளார். ஒரு காலத்தில், மு.க.ஸ்டாலின் வெற்றிக்காக உழைத்தவர், இன்றைக்கு அவரையே வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார். ஆனால், இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் அரசியலில் சாதாரணம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *