தமிழகத்தில் 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டிய விஜய்
1 min read
Vijay ended the 59-year rule of Dravidian parties in Tamil Nadu.
4.5.2026
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழகத்தில் 1952-ம் ஆண்டு முதல் சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. முதல் 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.
1967-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக அண்ணா பொறுப்பேற்றுக்கொண்டார். 1969-ம் ஆண்டு அவரது மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக கருணாநிதி பதவி ஏற்றார். 1971-ம் ஆண்டு தேர்தலிலும் தி.மு.க.வே வெற்றி பெற்று முதல்-அமைச்சராக கருணாநிதி தொடர்ந்தார்.
அதன்பிறகு, தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து அ.தி.மு.க.வை தொடங்கிய பிறகு 1977, 1980, 1985-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், அ.தி.மு.க.வே தொடர் வெற்றிகளை பெற்று எம்.ஜி.ஆரே முதல்-அமைச்சராக இருந்தார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு நடந்த சட்டசபை தேர்தல்களில் தி.மு.க., அ.தி.மு.க. மாறி.. மாறி.. ஆட்சி அமைத்தது. அதாவது, 1989, 1996, 2006, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கருணாநிதி மறைவுக்கு பிறகு 2021-ம் ஆண்டு, அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார்.
அதேபோல், 1991, 2001, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1991, 2001, 2011-ம் ஆண்டுகளில் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்து வந்த நிலையில், அவருடைய மறைவுக்கு பிறகு 2016-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார்.
இப்படி, தமிழகத்தில் 1967-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரை தொடர்ந்து 59 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்த நிலையில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்து வெற்றி வாகை சூடியுள்ளது. இதன் மூலம் 59 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதித்தமும் முடிவுக்கு வந்துள்ளது.