கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின்- தொண்டர்கள் கண்ணீர்
1 min read
MK Stalin expressed his gratitude in person in Kolathur constituency
5.5.2026
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான 2026ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் ஒரேகட்டமாக ஏப்.23ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என நான்குமுனை போட்டி நிலவியது. இச்சூழலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
விஜயின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிப் பெற்றது. திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது. முதலமைச்சர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியை தழுவினார். முதலமைச்சர் ஸ்டாலின் தோல்வியடைந்தது திமுக மட்டுமின்றி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பல வெற்றி, தோல்விகளை தான் சந்தித்துள்ளதாகவும், இதைப்பற்றி தொண்டர்கள் கவலை கொள்ளவேண்டாம் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இன்று கொளத்தூர் மக்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதாக கூறியிருந்தார். அதன்படி இன்று பிற்பகல் கொளத்தூர் தொகுதியில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது தொண்டர்கள் பலரும் கண்கலங்கியபடி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
அப்போது அவருடன் இருந்த சேகர்பாபு அழுதநிலையில் இருந்தார். திமுக தொண்டர்களும் பலர் கண்ணீர்விட்டு அழுதனர்.
இதனைப்பார்த்த ஸ்டாலின், தொண்டர்களிடம் அழவேண்டாம் என ஆறுதல் கூறினார்.