தூத்துக்குடி கடலில் அத்துமீறி மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு
1 min read
16 Kerala fishermen arrested along with a fishing boat for illegally fishing in Thoothukudi waters
12.5.2026
கடல் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 60 நாட்களுக்கு விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஏப்ரல் 15 முதல் இந்த ஆண்டுக்கான தடைக்காலம் தொடங்கி அமலில் உள்ளது. இதனால் தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்கள் படகுகளைக் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் தூத்துக்குடி கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடந்த சில நாட்களாக மீன்பிடித்து வருவதாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில், நேற்று இரவு தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் சென்று கண்காணித்தபோது, அங்கு கேரள மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.
உடனடியாகச் செயல்பட்ட தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள், அத்துமீறி நுழைந்த கேரள மீனவர்கள் 16 பேரை அவர்களது படகுடன் சிறைபிடித்துக் கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கடலோரப் பாதுகாப்புப் படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்த அந்த 16 கேரள மீனவர்களிடமும் கடலோரப் பாதுகாப்புப் படை போலீசாரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தடைக்காலத்தில் அண்டை மாநில மீனவர்கள் தமிழக எல்லைக்குள் புகுந்து மீன்பிடித்த இந்த சம்பவம் தூத்துக்குடி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.