ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா, மீண்டும் தலைவராக பொறுப்பேற்பு
1 min read
Alankulam Town Panchayat Chairperson Sudha takes charge again
17.5.2026
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற 7-வது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த சுதா என்பவர் ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக பதவி வகித்தார்.
இவர், ஆலங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனக்கு சொந்தமான 8 சொத்துக் களுக்கு வரி கடந்த 2022-23-ம் ஆண்டு செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பாணை வழங்கியும், இவர் சொத்துவரியை செலுத்தவில்லை.
9-வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்தாத சுதா மோகன்லாலை வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சுபாஷ் சந்திரபோஸ் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுதா மோகன்லாலை 3 மாதத்துக்குள் தகுதி நீக்கம் செய்யவும், அந்த விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்த தவறியதால் நீதிமன்ற உத்தரவின்படியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படியும், சுதா மோகன்லால் ஆலங்குளம் பேரூராட்சிமன்ற 7-வது வார்டு உறுப்பினர் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சிமன்ற தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து தகுதி இழந்ததாக பேரூராட்சி செயல் அலுவலர் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சுதா, தென்காசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, தீர்ப்பு வரும் வரை சுதா, தலைவர் பதவியில் நீடிப்பார் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.