June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

விஜய் அமைச்சரவையின் முழு இலாகா பட்டியல் வெளியீடு

1 min read

Vijay’s cabinet’s full portfolio list released

21.5.2026

தமிழகத்தில் புதிய அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பிறகு, அமைச்சர்களுக்கான துறைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் முக்கியமான மாற்றமாக, மூத்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வசம் இருந்த நிதித்துறை தற்போது புதிய அமைச்சரான என். மரிய வில்சனுக்கு மாற்றப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

லோக் பவனில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் படி, முதலமைச்சர் விஜய் சில முக்கிய அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனை ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதிய மாற்றங்களின்படி, முதலமைச்சர் விஜய்யின் கட்டுப்பாட்டில் இருந்த பொதுத்துறை, உள்துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ், சிறப்பு திட்ட அமலாக்கம், பெண்கள் நலம், இளைஞர் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம் உள்ளிட்ட துறைகளுடன் தற்போது மாவட்ட வருவாய் அலுவலர்கள், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் தள்ளுபடி போன்ற கூடுதல் பொறுப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் மிகப்பெரிய மாற்றமாக, இதுவரை நிதி அமைச்சராக இருந்த கே.ஏ. செங்கோட்டையன் தற்போது “வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை” அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த நிதித்துறை பொறுப்பு புதிய அமைச்சரான என். மரிய வில்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதியை சேர்ந்த என். மரிய வில்சன் தற்போது நிதி, ஓய்வூதியம், திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறைகளின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், அமைச்சரவையில் மிகவும் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றான நிதித்துறை புதிய முகத்திற்கு சென்றுள்ளது.

தூத்துக்குடி தொகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் மீன்வளத்துறை அமைச்சராகவும், அவிநாசி தொகுதியை சேர்ந்த எஸ். கமலி கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குமாரபாளையம் தொகுதியை சேர்ந்த சி. விஜயலட்சுமிக்கு பால்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தொகுதியை சேர்ந்த ஆர்.வி. ரஞ்சித்குமார் வனத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

கும்பகோணம் தொகுதியை சேர்ந்த வினோத்திற்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. திருவாடானை தொகுதியை சேர்ந்த ராஜீவ் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரிக்கு சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை வழங்கப்பட்டுள்ளது. வேளச்சேரி தொகுதியை சேர்ந்த ஆர். குமார், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலூர் தொகுதியை சேர்ந்த பி. விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. கோவை வடக்கு தொகுதியை சேர்ந்த சம்பத் குமார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அறந்தாங்கி தொகுதியை சேர்ந்த ஜே. முகமது ஃபர்வாஸ் தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். தாம்பரம் தொகுதியை சேர்ந்த டி. சரத்குமார் மனிதவள மேலாண்மை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கிணத்துக்கடவு தொகுதியை சேர்ந்த கே. விக்னேஷுக்கு மதுவிலக்கு மற்றும் கலால் துறை வழங்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *