June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு- போப் லியோ மனிப்பு கேட்டார்

1 min read

Pope Leo asks for forgiveness for Vatican’s role in slave trade

27.5.2026
அடிமை வணிகத்தை சட்டப்பூர்வமாக்கியதில் வாடிகனே பங்காற்றியதற்காகவும், பல நூற்றாண்டுகளாக இதைக் கண்டிக்கத் தவறியதற்காகவும் மன்னிப்புக் கோருவதாக போப் பதினான்காம் லியோ திங்கள்கிழமை தெரிவித்தார்.

மேலும், வாடிகனின் இந்த செயல்பாட்டை “கிறிஸ்துவ வரலாற்றில் நீங்காத வடு” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில், அட்லாண்டிக் கடந்த அடிமை வணிகத்தில் கிறிஸ்துவர்களின் ஈடுபாட்டுக்காக போப்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். ஆனால், இறை நம்பிக்கையற்றவர்களை அடிமைப்படுத்தி, அடக்குமுறைக்கு உட்படுத்த ஐரோப்பிய மன்னர்களுக்கு அதிகாரம் வழங்கியதில் கடந்தகால போப்கள் பங்காற்றியதை எந்தவொரு போப்களும் இதுவரை பகிரங்கமாக ஒப்புக் கொண்டதும் இல்லை. அதற்காக மன்னிப்புக் கோரியதும் இல்லை.

இந்த நிலையில், வாடிகன் நகரில் திங்கள்கிழமை ‘மகத்தான மனிதநேயம்’ (Magnifica Humanitas – ‘மக்னிஃபிகா ஹியூமனிடாஸ்’) என்ற பெயரிலான தனது முதல் மடலை வெளியிட்ட போப் லியோ, வரலாற்றுத் தவறுக்காக மன்னிப்புக் கோரினார்.

செய்யறிவை அதிகளவில் சார்ந்திருக்கும் காலகட்டத்தில் மனிதகுலத்தைப் பாதுகாப்பது பற்றி விரிவான மடலை போப் வெளியிட்டுப் பேசினார்.

இந்த ‘மகத்தான மனிதநேயம்’ மடலில், காலனித்துவ கால அடிமை வணிகத்தில் வாடிகன் ஆற்றிய பங்கிற்காக போப் மன்னிப்பு கோரியுள்ளார்.

அந்த மடலில், “இறைவனால் எல்லையற்ற அன்பு செலுத்தப்பட்ட நபர்களை, அவர்களின் கண்ணியத்துக்கு முற்றிலும் மாறாக, அவர்கள் அனுபவித்த அளவற்ற துன்பத்தையும், அவமானத்தையும் நினைக்கும்போது அவர்களின் ஆழ்ந்த துக்கத்தை உணராமல் இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இதற்காக வாடிகன் சார்பாக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று எழுதியுள்ளார்.

அடிமைத்தனத்தை சட்டப்பூர்வமாக்கிய வரலாறு

15 ஆம் நூற்றாண்டில், வாடிகனில் இருந்து பிறப்பிக்கப்பட்ட தொடர்ச்சியான வழிகாட்டுதல்கள், போர்த்துகீசிய மன்னர்களுக்கு ஆப்பிரிக்காவையும், அமெரிக்காவையும் கைப்பற்றவும், கிறிஸ்துவர்கள் அல்லாதோரை அடிமைப்படுத்தவும் அதிகாரம் அளித்தன.
உதாரணமாக, 1452 -ல் போப் ஐந்தாம் நிக்கோலஸ் ‘டம் டைவர்சாஸ்’ (Dum Diversas) என்ற ஆணையை வெளியிட்டார். அந்த ஆணையானது, இறைமறுப்பாளர்கள், கிறிஸ்துவ எதிரிகள், பிற மதத்தினர் உள்ளிட்டோர் எங்கிருந்தாலும், அவர்களின் நிலம் உட்பட அனைத்து உடைமைகளையும் படையெடுக்கவும், கைப்பற்றவும், அடிமைப்படுத்தவும் வழிவகுத்தது.

மேலும், போர்த்துகீசியர்களுக்கு அவர்களை நிரந்தரமாக அடிமைப்படுத்தவும் அனுமதி அளித்தது.

இதேபோல், அடுத்த மூன்று ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ‘ரோமானஸ் பொன்டிஃபெக்ஸ்’ (Romanus Pontifex) என்ற மற்றொரு ஆணை, காலனித்துவ காலத்தில் ஆப்பிரிக்காவிலும் அமெரிக்காவிலும் நிலங்களைக் கைப்பற்றுவதை சட்டப்பூர்வமாக்கியது.

பின்னர், ஸ்பானிய மன்னர்கள் அமெரிக்காவுக்கான உரிமைகளைத் திரும்பப் பெற்றனர்.

அடிமைத்தனத்தைக் கண்டிப்பதில் தாமதம்

பல நாடுகள் அடிமைத்தனத்தை ஒழித்த நீண்ட காலத்துக்குப் பிறகு, 1888 -ல் அடிமைத்தனத்தை வெளிப்படையாகக் கண்டித்த முதல் போப், தன் பெயரைக் கொண்ட போப் மூன்றாம் லியோ என்று போப் பதினான்காம் லியோ மடலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “அடிமைத்தனம் எனும் கொடுமையை கண்டிக்க இந்தச் சமூகமும் திருச்சபையும் எடுத்துக்கொண்ட தாமதத்தை நம்மால் மறுக்க முடியாது.

அடிமைத்தனத்துக்கு எதிரான முழுமையான முரண்பாட்டை வெளிப்படையாக அங்கீகரிக்க பதினெட்டு நூற்றாண்டுகள் ஆனபோதிலும், ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் இத் திருச்சபை தனது கோட்பாட்டின் அடிப்படையாக நீண்ட காலமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இது கிறிஸ்துவ வரலாற்றில் நீங்காத வடு. இதிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *