June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

நாசரேத்: போலீஸ் நிலையம் அருகே போதையில் கட்டிட தொழிலாளி அடித்து கொன்ற நண்பன்

1 min read

Thoothukudi: Construction worker beaten to death near police station

30.5.2026
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வகுத்தான்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜா (வயது 41). இவரும், நாசரேத் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பாஸ்கர்(37) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். கட்டிடத் தொழிலாளிகளான இவர்கள் இருவருமே ஒன்றாக வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இவர்களுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் நாசரேத் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மதுபோதை அதிகமான நிலையில், இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் அதிக ஆத்திரமடைந்த பாஸ்கர், அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து ராஜாவை சரமாரியாகத் தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாஸ்கர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த ராஜாவின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தப்பியோடிய பாஸ்கரை சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். நாசரேத் காவல் நிலையம் அருகிலேயே குடிபோதையில் கட்டிடத் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *