செங்கோட்டை அருகே பெண்களுக்கான கிராமசபை கூட்டம்-ஆட்சியர் பங்கேற்பு
1 min read
Gram Sabha meeting for women held near Sengottai; District Collector participates
26.11.2026
பெண்கள் அடுத்தவர்களை சார்ந்து வாழாமல் தன்னம்பிக்கையுடன் வாழ முயற்சி செய்ய வேண்டும் என்று சீவநல்லூர் கிராமசபை கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா பேசினார்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சீவநல்லூர் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் நேற்று (26.11.2026) சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் மூலம் பாலின விகிதத்தை தடுக்கும் நோக்கத்தில் சிறப்பு விழா நடத்தப்படும். உயர்கல்வி, திறன்மேம்பாடு, பெண் குழந்தைகளின் உயிர்வாழ்வு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வளரிளம் பெண்களுக்கான கிராமசபை (இளஞ்சிவப்பு கிராம சபை) கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு பெண்கள் பள்ளி சார்ந்த மாணவிகளிடம் உரையாற்றினார்.
இக்கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, பேசியதாவது:-
இந்த கிராம சபை மூலமாக உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பெண் கல்விக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என உங்களுக்கு தெரியுமா. ஏனெனில் சுதந்திரமாக இருப்பதற்கு பெண்கல்வி அவசியம். தன்னம்பிக்கையோடு தைரியமாக இருக்க பெண்கல்வி அவசியம். நம் வீட்டில் அம்மா தான் நாம் என்ன செய்ய வேண்டும் என்று எல்லாவற்றையும் செய்வார்கள். ஆண்கள் தான் எந்த முடிவிலும் உறுதியாக இருப்பார்கள் பெண்கள் உறுதியாக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் கூடாது. ஆண் பெண் என்ற வேறுபாடு இருக்க கூடாது. நீங்கள் பள்ளி சம்பந்தமாக அம்மா அப்பாவிடம் பேச முடியாத விஷயங்கள் எதுவாக இருந்தாலும் உங்களுக்கான 1098 உதவி எண் மூலமாக அதனை தெரிவிக்கலாம். நமக்கு உதவ யாரும் இல்லை என நினைக்க கூடாது. உங்களை யாரேனும் தவறாக வழி நடத்தினால் நீங்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அடுத்தவர்களை சார்ந்து வாழாமல் தன்னம்பிக்கையுடன் வாழ முயற்சி செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பிறகு வேலைக்கு சென்று யாரையும் சார்ந்து வாழாமல் உங்கள் வருமானத்தின் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.
18 வயதுக்குப் பிறகு திருமணம் செய்யப் போகிறீர்கள் அதனால் வேலைக்குச் செல்ல வேண்டாம் என யாராவது சொன்னால் ஏற்றுக்கொள்ளக் கூடாது. உங்களுக்கு எது நல்லது என தோன்றுகிறதோ அதை செய்ய வேண்டும். பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது படித்து முடித்தபின் வேலைக்கு செல்லும் இடத்தில் யார் மூலமாகவும் தொந்தரவு அல்லது பிரச்சனைகள் இருந்தால் மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளிடம் தகவல்
தெரிவித்து உதவி கேட்கலாம். அவர்கள் கண்டிப்பாக உதவி செய்வார்கள். நீங்களும் உங்களைப் போன்ற பெண் குழந்தைகளுக்கு உதவலாம். வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் இருக்கலாம் ஆனால் படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். நாம் அரசு பள்ளியில் படிக்கிறோம் நம்மால் எதுவும் செய்ய முடியாது என நினைக்க கூடாது. மருத்துவர்கள், காவலர்கள் அனைவரும் நம்மைப்போன்று படித்து முன்னேறியவர்கள் தான். நானும் முதல் முயற்சியிலேயே மாவட்ட ஆட்சியராக வரவில்லை. கடினமாக முயற்சி செய்துதான் வந்துள்ளேன். எனவே, உங்களால் எதுவும் முடியாது என நினைக்க கூடாது. முயற்சி செய்தால் அனைத்தையும் அடையலாம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் சார்பாக பெண் குழந்தைகளுக்கு அனைத்து உதவிகளும் செய்வதற்கு அரசு தயாராக உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். உங்களுக்காக தான் சிங்கப்பெண் அதிரடிப்படையையே உருவாக்கியிருக்கிறார். எனவே நீங்கள் யாரும் யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டாம் உங்களுக்கு உதவ அதிகாரிகளாகிய நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா, தலைமையில் இந்திய அரசியலமைப்பு உறுதிமொழி, வரதட்சணைக்கு எதிரான உறுதிமொழி, அனைத்து வீடுகளிலும் கழிவறையின் அவசியம் குறித்த உறுதிமொழி ஆகியவற்றை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முனைவர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட சமூக நல அலுவலர் செல்வி.பே.மதிவதனா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வி.கோவிந்தன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் விஜயன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.