கோவிலுக்கு அருகே சர்ச் கட்டுமானத்துக்கு ஐகோர்ட் தடை
1 min read
High Court stays church construction near temple.
19.6.2026
‘மத ரீதியில் பதற்றமான நகரமான கோவை அருகே காளப்பட்டியில், மாரியம்மன் கோவிலுக்கு அருகில் சர்ச் கட்டுவதில் உள்நோக்கம் இல்லை என கூற முடியாது’ என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சர்ச் கட்டுவற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட காளப்பட்டியில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில், 5 சென்ட் பரப்பளவு கொண்ட அரசு புறம்போக்கு இடத்தில், சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ சர்ச் 2010ல் கட்டப்பட்டு வந்தது. இதற்கு, அப்பகுதி ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதையும் மீறி, அப்போதைய கலெக்டர், சர்ச் கட்ட அனுமதி வழங்கினார். இதற்கு எதிராக கோவில் நிர்வாகம் தரப்பில், கோவை மாவட்ட முன்சிப் கோர்ட்டில், 2011ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உத்தரவு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கட்டுமான பணிகளை தொடங்கினர். பக்தர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகளை நிறுத்த கலெக்டர் உத்தரவிட்டார். 13 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், தேவாலய நிர்வாகம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2024ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்த பின், சர்ச் கட்டுவதற்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதற்கிடையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், கடந்த மாதம் சர்ச் கட்டும் பணியை மீண்டும் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மீண் டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சர்ச் கட்டுமான பணிக்கு தடை விதிக்கக்கோரி, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த காளப்பட்டியில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.பாஸ்கர் வாதாடியதாவது: தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதும், ஒரு சில அடிப்படைவாத அமைப்புகள் துணிச்சல் பெற்றுள்ளன. ஒவ்வொரு கிராமங்களிலும் புதிதாக சர்ச்கள் கட்டப்பட வேண் டும் என்பதை வலியுறுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.
ஆவணங்கள் தாக்கல் சபாநாயகர் பிரபாகர் கூட பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, ‘பைபிள்’ வாசகங்களை மேற்கோள் காட்டினார்; ஆயிரக்கணக்கான பைபிள் புத்தகங்களை வினியோகித்ததாகவும் கூறினார்.
சர்ச் கட்டப்பட்டு வரும் கிராமத்தில், ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ள நிலையில், சர்ச் கட்ட அனுமதித்தால், மதமாற்றம் செய்ய வழி வகுக்கும். இவ்வாறு அவர் வாதாடினார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சட்டசபையில் ஆற்றிய உரையில், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என கூறியபோது கூட,ஆளுங்கட்சியினர் அதை கண்டிக்கவோ அல்லது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ இல்லை.
கோவில் நகரமான மதுரையில் இருந்து தேர்வான எம்.எல்.ஏ., முஸ்தபா, ‘சனாதன தர்மத்தை ஒழிப்பதே ஆளுங்கட்சியின் கொள்கை’ என கூறியதாக, மனுதாரர் தரப்பில் இந்த நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
கிராமங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.
கோவை மத உணர்வு மிகுந்த நகரம். இங்கு, குண்டு வெடிப்பு மற்றும் மத கலவரங்கள் நடந்துள்ளன. முன்மொழியப்பட்ட சர்ச், தற்போதுள்ள மாரியம்மன் கோவிலுக்கு அருகில் அமையவுள்ளது. கோவில் அருகில் ஒரு பெரிய சர்ச் கட்ட முன்மொழியப்பட்டால், அதில் தீய நோக்கம் இருக்கக்கூடும் என்பதை மறுக்க முடியாது.
சர்ச் கட்டப்படும் பகுதி, அரசு புறம்போக்கு இடம் என்பதை வருவாய் பதிவேடு காட்டுகிறது. ஒரு தேவாலயம் அமைக்க அனுமதி வழங்கும் உத்தரவு, இந்த அம்சத்தை கவனத்தில் கொள்ளவில்லை.
ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது, கோவிலுக்கு அருகாமையில் சர்ச் கட்டுவதை, அவர்கள் கடுமையாக எதிர்த்தால், அந்த எதிர்ப்பை சாதாரணமாக புறக்கணித்து விடக் கூடாது.
எதிர்மனுதாரர்கள் சர்ச் கட்ட, காவல் துறை பாதுகாப்பை கோரியிருக்கக்கூடாது. ஏனென்றால், 2010ல் சர்ச் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு இருந்த போதிலும், அதன்பின், 2011ல் அசல் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், 13 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை.
ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த முற்படுவதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இடைக்கால உத்தரவு வழங்கப்படாவிட்டால், சமூக நல்லிணக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்.
நம் கடமை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவும், எதிர்மனுதாரர்களுக்கு எதிராகவே உள்ளது. அரசியல் சூழல் மாறக்கூடும். ஆனால், சட்டத்தின் நிலை அதுவாகவே இருக்கும் வரை, அதை செயல்படுத்துவது நம் கடமை.
ஏற்கனவே, இவ்விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நிலுவை வழக்கு முடிவடைந்த பின், சர்ச் கட்டுவதற்கு புதிய மனுவை சமர்ப்பிக்கலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளார். எனவே, நிலுவை வழக்கு முடிவடையும் வரை, தற்போதைய நிலை தொடர வேண்டும் என்பதே அதன் வெளிப்படையான அர்த்தம்.
இந்த உத்தரவு இன்று வரை செல்லுபடியாகும். எனவே, சர்ச் கட்டும் விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.