June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

மேகதாது அணை விவகாரம்; முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது

1 min read

Mekedatu dam issue: Special resolution moved by Chief Minister Vijay passed.

19.6.2026
சட்டசபைக்கு மேகதாது அணை விவகாரத்தில், முதல்-அமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.
காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எந்த வித அனுமதியுன் வழங்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டசபையில் இன்று (ஜூன் 19) தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தனித்தீர்மானத்தை கொண்டு வந்து முதல்வர் விஜய் சட்டசபையில் பேசுகையில், ”காவிரி நடுவர் மன்றம் மற்றும் சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சக செய்வதை ஏற்க முடியாது. ஒருமித்த கருத்தோடு இந்த தீர்மானத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை சட்டசபை தெரிவித்துக்கொள்கிறது.

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என மத்திய அரசை இந்த சபை வலியுறுத்துகிறது. காவிரி நடுவர் மன்றமும், சுப்ரீம்கோர்ட்டும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும், படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து விட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது.

காவிரிப் பிரச்னை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்னையாகும். ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு மத்திய அரசை இந்த சபை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாமக எம்எல்ஏ சவுமியா, விசிக எம்எல்ஏ வன்னி அரசு உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
பிரேமலதா கூறும்போது, “காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர்கள் பிரச்னைகளுக்கு இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படவில்லை; மற்ற மாநிலங்களை எதிர்பார்க்காமல், தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும்.” என்றார்.
பாமக எம்எல்ஏ சவுமியா பேசுகையில், ”5.5 கோடி மக்கள் காவிரி நீரை நம்பி இருக்கிறார்கள்; மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும்; முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கிறோம்” என்றார்.

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பேணி காக்க வேண்டியது நம் கடமை; தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேறியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *