ரஷியாவில் வரலாறு காணாத பெட்ரோல் தட்டுப்பாடு
1 min read
Unprecedented petrol shortage in Russia
2.7.2026
பெட்ரோல் தட்டுப்பாட்டை சமாளிக்க பெலாரஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் இருந்தும், இந்தியாவிடம் இருந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷியா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே 5 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் ராணுவம் சமீபத்தில் ரஷியாவிற்குள் புகுந்து அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட பெரிய பெட்ரோல், டீசல் தயாரிக்கும் தொழிற்சாலைகளைத் குண்டு வீசி தகர்த்துள்ளது. இதனால், உலகிற்கே பெட்ரோல் கொடுக்கும் வல்லமை படைத்த ரஷியாவில் இப்போது வரலாறு காணாத பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட ஊர்களில் பெட்ரோல் போடுவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிற்பவர்களின் அவசரத் தேவைக்காக நடமாடும் கழிப்பறைகள் கூட அமைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் அதிபர் புதின் அரசு தற்போது திணறி வருகிறது.
ரஷியாவைப் பொறுத்தவரை கோடை காலங்களில் எரிபொருள் தேவை அதிகமாக உள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு சுமார் 1,10,000 டன் பெட்ரோல் தேவைப்படுகிறது. இந்த சூழலில், பெட்ரோல் தேவையை சரிகட்டுவதற்காக பெலாரஸ் உள்ளிட்ட தனது அண்டை நாடுகளிடம் இருந்தும், இந்தியாவிடம் இருந்தும் எரிபொருள் இறக்குமதி செய்ய ரஷியா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பெலாரஸ் நாட்டிடம் இருந்து ரஷியா பெட்ரோல் இறக்குமதி செய்து வரும் நிலையில், மேலும் இறக்குமதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம், ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில், ரஷிய எண்ணெயின் பங்கு பாதிக்கும் அதிகமாக இருந்துள்ளது. ஜூன் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 2.70 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யை இந்தியா பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குவதற்கு ரஷியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது குறித்து ரஷியாவின் எரிசக்தி அமைச்சகமும், இந்தியாவின் பெட்ரோலிய அமைச்சகமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.