July 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: தந்தை-மகன் கொலையில் 3 பேர் கைது

1 min read

Father and son murdered in Nellai; 3 arrested.

4/7/2026
திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை-மகன் படுகொலையில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அனைவரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த சித்திரபுத்திரன் (வயது 70), மகன் காளிமுத்து(40). விவசாயியான இவர் வியாழன் அன்று மாலையில் தனது மகன்கள் சின்னத்துரை(15), ஜெயராஜ்(5) ஆகியோருடன் பைக்கில் ரெட்டியார்புரத்தில் இருந்து மூலச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை கார் மற்றும் 3 பைக்குகளில் மர்ம கும்பல் பின்தொடர்ந்து சென்றது. மாதுடையார்குளம் அருகில் சென்றபோது, காளிமுத்துவின் பைக் மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய காளிமுத்துவை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி, அவரது தலையை துண்டித்து படுகொலை செய்தது. சிறுவன் சின்னத்துரையின் காலில் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
மேலும் காளிமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்து சென்று கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை மெயின் ரோட்டில் வீசிச் சென்றது.
பைக் மீது காரை மோத விட்டு தந்தை- மகன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இரட்டைக்கொலை குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2006-ம் ஆண்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த உறவினர்களான இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தீராத பகையை ஏற்படுத்தி, இதுவரை 7 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதும், தற்போது எதிர் தரப்பினர் பழிக்குப்பழியாக காரை மோதவிட்டு தந்தை-மகனை கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி தகவலும் தெரிய வந்தது.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஸ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்பேரில், கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 9 தனிப்படைகளை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுதொடர்பாக மூலச்சி பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் மகன்கள் மகேஷ், மணிகண்டன், கிருஷ்ணன், பெருமாள்பாண்டியன் மகன்கள் அருள், மணி, பட்டுராஜா, ராசையா மகன்கள் சுபாஷ், மகேந்திரன், வெள்ளப்பாண்டி மகன் தங்கதுரை, கிருஷ்ணன் மகன் கந்தன், மூக்காண்டி மகன் ராஜதுரை ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்கள் அனைவரையும் கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையே கொலையாளிகளை கைது செய்தால்தான், தந்தை-மகன் உடல்களை பெற்று கொள்வோம் என்று குடும்பத்தினர், உறவினர்கள் தெரிவித்தனர். மூலச்சி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மூலச்சி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (வயது 29), குமார் (23) மற்றும் ஊர்காடு பகுதியை சேர்ந்த முத்துச்செல்வன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் , மீதமுள்ள குற்றவாளிகளை பிடிக்க போலீசாரம் தீவிரம் காட்டி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று மூலச்சி கிராமத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், “தந்தை-மகன் இரட்டைக்கொலை தொடர்பாக சந்தேகத்திற்கு இடமான நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை முடிவில் கைது நடவடிக்கை இருக்கும். கடந்த 2010-ம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தோடு இந்த ஊரில் நடந்த மோதல் முடிவுக்கு வந்தது. ஆனாலும் போலீசார் கண்காணிப்பில்தான் இந்த கிராமம் இருந்தது. அதனை மீறி இரட்டைக்கொலை நிகழ்ந்துள்ளது. பாதிப்பை நேரில் கண்ட காளிமுத்துவின் மகன் கூறிய தகவலையும் விசாரணைக்கு எடுத்துள்ளோம். ஆனாலும் கூடுதல் நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையில், கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

தமிழகத்தை உலுக்கிய தந்தை-மகன் படுகொலைக்கு மூலக்காரணம் கடந்த 2006-ம் ஆண்டில் இருந்தே தொடர்கிறது. அதாவது, மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த சித்திரபுத்திரனும், பெருமாள்பாண்டியனும் உறவினர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் அடுத்தடுத்த வீடுகளில் ஒற்றுமையாக வசித்து வந்தனர். கடந்த 2006-ம் ஆண்டு சித்திரபுத்திரனின் மகன் சுப்பிரமணியன் மனைவிக்கும், பெருமாள்பாண்டியனின் மனைவிக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

கடந்த 2007-ம் ஆண்டு பெருமாள்பாண்டியனின் தரப்பினர் சுப்பிரமணியனை கொலை செய்தனர். இதன் தொடர்ச்சியாக 2008-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வைத்து சுப்பிரமணியனின் தம்பிகளான பாபநாசம், பெருமாள் ஆகிய 2 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு பழிக்குப்பழியாக கல்லிடைக்குறிச்சியில் பெருமாள்பாண்டியனின் ஆதரவாளரான சுப்பையா என்பவரை சரியாக ஒரு மாதம் கழித்து சித்திரபுத்திரனின் மற்றொரு மகனான காளிமுத்து மற்றும் கூட்டாளிகள் வெட்டிக்கொலை செய்தனர். அதன்பின்னர் 2009-ம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வைத்து பெருமாள்பாண்டியன் தரப்பைச் சேர்ந்த சின்னதம்பி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் 2010-ம் ஆண்டு பெருமாள்பாண்டியன் தலை துண்டித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். பின்னர் சித்திரபுத்திரன் தரப்பைச் சேர்ந்த குமார் என்பவர் அதே ஆண்டு திண்டுக்கல்லில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

அதன் பின்னர் போலீசார் இருதரப்பைச் சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து 16 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. வியாழன் அன்று வீரவநல்லூரில் தந்தை-மகன் படுகொலை செய்யப்பட்டனர். எனவே, தெருக்குழாயில் 2 பெண்கள் போட்ட சண்டையால் 20 ஆண்டுகளாக இதுவரையிலும் 9 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2010-ம் ஆண்டு பெருமாள்பாண்டியன் மீது காரை மோத விட்டு, அவரது தலையை துண்டித்து கொலை செய்தனர். அவர் கொலை செய்யப்பட்ட இடமான கரம்பை பகுதியிலேயே, தற்போது காளிமுத்துவை கொலை செய்து அவரது தலையை சாலையில் வீசி சென்றுள்ளனர். மேலும் பெருமாள்பாண்டியனின் மீது அம்பாசிட்டர் காரை மோத விட்டது போன்றே தற்போதும் அதே மாடலில் பழைய காரை விலைக்கு வாங்கி இரட்டைக்கொலையை அரங்கேற்றி உள்ளனர். அந்த காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த கார் முன்னீர்பள்ளத்தை சேர்ந்த ஒருவர் பெயரில் இருந்ததும், அந்த நபரிடம் விசாரணை நடத்திய போது, அந்த காரை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருக்கு விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *