தவெக அரசுக்கு எதிராக கவர்னரிடம் நயினார் நாகேந்திரன் புகார்
1 min read
Nainar Nagendran lodges complaint with the Governor against the TVK government.
4.7.2026
சென்னையில் கவர்னர் அர்லேக்கரை சந்தித்த தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசு மீது புகார் அளித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;-
சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள் பவனில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து தவெக ஆட்சியில் நடைபெற்ற முக்கிய குற்றங்களைக் குறித்து புகார் அளித்தோம்.
குறிப்பாக, கடந்த ஜூன் 21ம் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம் காங்கிரசைச் சேர்ந்த உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதனைக் குறித்து உடனடியாக முறையான விசாரணை நடத்த உத்தரவிடவும், மேலும் விசாரணை நிறைவடையும் வரை அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்து, தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கோரி மனு வழங்கினோம்.
மேலும், கடந்த ஜூன் 5ம் தேதி நடைபெற்ற தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, எந்தவித அரசுப் பொறுப்பும் வகிக்காத தனி நபர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி பங்கேற்றதாக எழுந்துள்ள புகாரைக் கருத்தில் கொண்டு, அதனைக் குறித்தும் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டி தனி மனுவொன்றையும் கவர்னரிடம் சமர்ப்பித்தோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.