July 5, 2026

Seithi Saral

Tamil News Channel

செந்தில்பாலாஜி வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க போலீஸ் நடவடிக்கை

1 min read

Police take measures to prevent Senthil Balaji from fleeing abroad.

5.7.2026
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், தவெக ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ.வான இளையராஜாவை சிலர் அணுகி, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசியுள்ளனர்.
இதற்கு உடன்படாத எம்.எல்.ஏ, இளையராஜா கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் கடந்த மாதம் (ஜூன்) 29-ந் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
திருவல்லிக்கேணி போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையின் அடிப்படையில், ‘ஐபிடிஎஸ்’ நிறுவனத்தை நடத்தும் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய 3 பேர் முதற்கட்டமாகக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் சீனிவாசன், செல்வன், குரோம்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் கரூரில் பிடிபட்ட கார்த்திக், ரமேஷ் என மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், சென்னையில் நரேஷைச் சந்தித்துள்ளதும், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமாரின் அறிவுரையின் பேரிலேயே இந்த ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கில் அசோக்குமார் சேர்க்கப்பட்டு, அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாகியுள்ள அசோக்குமார் மற்றும் இந்தச் சதியின் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்த விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்கு சென்று சென்னை திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் வழங்கினர். அந்த சம்மனை செந்தில் பாலாஜியின் தந்தை கையெழுத்து போட்டு பெற்றுள்ளார்.
செந்தில்பாலாஜியுடம் அசோக்குமாரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வரும் திங்களன்று(நாளை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியும் அசோக் குமாரும் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விமான நிலைய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்கள் இருவருக்கும் எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விமான நிலையங்கள் வழியாக நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அலுவலகத்தில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ‘சம்மன்’ அனுப்பி இருந்த நிலையில் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அவகாசம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதேபோல் செந்தில்பாலாஜி வெளிநாடு சென்றுவிடாமல் இருக்கவே லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *