July 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பருவநிலை மாற்றத்தால் உருகிய அமர்நாத் பனிலிங்கம்

1 min read


Amarnath ice lingam melted due to climate change.

11.7.2026
அமர்நாத் புனித யாத்திரையின் தொடக்க நாளில் சுமார் 5 அடி உயரத்தில் காட்சியளித்த பனிலிங்கம் ஒரு வாரத்துக்குள் சுமார் 90 சதவீதம் வரை பனிலிங்கம் உருகி உள்ளது.

இமயமலையில் 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோவில் அமைந்து உள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த 3-ந்தேதி தொடங்கியது.

அமர்நாத் குகை கோவிலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மே 23-ந் தேதி எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் 7 அடி உயரத்துக்கு பனிலிங்கம் காட்சியளித்தது. அப்போது முதலே பனிலிங்கம் உருகத் தொடங்கியது.

புனித யாத்திரையின் தொடக்க நாளில் சுமார் 5 அடி உயரத்தில் பனிலிங்கம் காட்சியளித்தது. ஆனால் ஒரு வாரத்துக்குள் சுமார் 90 சதவீதம் வரை பனிலிங்கம் உருகி உள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

கடந்த 2004, 2006, 2007, 2016 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பனிலிங்கம் உருகி உள்ளது. ஆனால் தற்போது வழக்கத்தைவிட அதிவேகமாக பனிலிங்கம் உருகி இருக்கிறது. இதற்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் ஆகும்.

அமர்நாத் குகை கோவில் பகுதியில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை வழிபட்டு உள்ளனர். அதிக பக்தர்கள் குகை கோவிலுக்குள் செல்லும்போது வெப்பம் அதிகரிக்கிறது.

குகையின் மேற்பரப்பில் இருந்து நீர்த்துளிகள் வடிந்து பனிலிங்கமாக மாறுவது வழக்கம். தற்போது நீர்த்துளிகளின் அளவு குறைந்து, வெப்பமும் அதிகரித்து உள்ளது. இதனால் பனி லிங்கத்தின் உயரம், அகலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குகைக்குள் வெப்ப காற்று நுழைவதால் பனிலிங்கம் உருகுகிறது. இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனிலிங்கம் வேகமாக உருகி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தியின் மகள் இல்ஜிதா முப்தி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மரங்களை வெட்டுவதாலும், சட்டவிரோத சுரங்கங்களாலும், மலை பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதாலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் அமர்நாத் பனிலிங்கம் உருகி உள்ளது. மலைகள், நதிகள், பனி சிகரங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருரின் கடமையாகும்” என்று கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *