July 13, 2026

Seithi Saral

Tamil News Channel

எழுத்தாளர் பூமணிக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு- முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு

1 min read


Funeral with state honors for writer Poomani – Chief Minister Vijay announces.

13.7.2026
தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பூமணி மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

பூமணி அவர்கள் கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார்.

அவரது ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரமாகும். மேலும், அவரது ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘அசுரன்’ திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது.

பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலக்கியத் துறையில் பூமணி அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *