July 15, 2026

Seithi Saral

Tamil News Channel

ஏஐ தாக்கத்தால் தனியார் வங்கிகளில் 10 ஆயிரம் பணியிடங்கள் குறைப்பு

1 min read

10,000 jobs cut in private banks due to the impact of AI.

15/7/2026
இந்தியாவின் நிதித்துறையை பொதுத்துறை வங்கிகளுடன் இணைத்து நிலைநிறுத்தும் முயற்சியில் 21 தனியார் வங்கிகள் பங்காற்றி வருகின்றன. பங்குச்சந்தை நிலவரப்படி அனைத்து தனியார் வங்கிகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.37 லட்சம் கோடியாக உள்ளது. தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை பொதுத்துறை வங்கிகளை விட அதிகமாகும். ஒட்டுமொத்தமாக 9 லட்சம் பேர் தனியார் வங்கிகளில் பணிபுரிகின்றனர். இதனால் வேலைவாய்ப்பு வழங்கும் உந்துசக்தியாக தனியார் வங்கிகள் உள்ளன.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் தனியார் வங்கிகள் வேலைவாய்ப்பை உருவாக்கும் விதம் முற்றிலும் மாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு வருகை உள்ளிட்டவை காரணமாக முன்னணி வங்கிகள் தனது பணியிடங்களை தொடர்ந்து குறைத்து வருகின்றன.

கடந்த நிதியாண்டில் (2025-26) தங்களது ஒட்டுமொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக குறைத்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. கடந்த 9 ஆண்டுகளில் முதன்முறையாகப் பணியாளர்கள் எண்ணிக்கை 3,343 குறைந்து, மொத்தம் 2.11 லட்சமாக மாற்றியுள்ளது. குறிப்பாக, அதன் ‘நீவ்’ என்ற சொந்த ஏ.ஐ. தளம் மூலம் வழக்கமான பணிகள் தானியாங்கி முறையாக மாற்றப்பட்டதால், மேற்பார்வை அல்லாத கீழ்நிலை ஊழியர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் மேல் குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் புதிதாக 400 கிளைகளைத் திறந்த ஆக்சிஸ் வங்கி, தொழில்நுட்ப முதலீடுகளின் பலனாக அதன் பணியாளர் எண்ணிக்கை 3,100 வரை குறைந்து 1.01 லட்சமாக மாறியுள்ளது. கோடக் மகேந்திரா வங்கி பணியாளர்கள் எண்ணிக்கை ஓராண்டில் 1,269 குறைந்துள்ளது. கணக்கு பராமரிப்பு, ஆவண சரிபார்ப்பு மற்றும் பரிவர்த்தனைகள் போன்ற வழக்கமான பின்அலுவலகப் பணிகளை ரோபோட்டிக்ஸ் மற்றும் ஏ.ஐ. கவனித்துக் கொள்கின்றன. இதனால் வங்கிகள் புதிய மனிதவளங்களை விற்பனை, வாடிக்கையாளர் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வேலைக்கு அமர்த்துகின்றன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *