July 15, 2026

Seithi Saral

Tamil News Channel

திருநெல்வேலி, ஒரத்தநாடு கால்நடை கல்லூரிகளுக்கு புதிய மாணவியர் விடுதிகள்

1 min read

New women’s hostels for Tirunelveli and Orathanadu Veterinary Colleges.

15.7.2026
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நல்லாசியுடன், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி, இன்று காலை 10.00 மணிக்கு, சென்னை, மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS), திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றிற்காக புதிதாக கட்டப்பட்ட மாணவியர் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.475.00 லட்சம் மதிப்பீட்டிலும், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரூ.456.00 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள கூடுதல் மாணவியர் விடுதிகள், இளங்கலை மற்றும் முதுகலை கால்நடை மருத்துவ மாணவியர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் தங்கி கல்வி பயிலும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

விடுதிக் கட்டடங்களைத் திறந்து வைத்ததை தொடர்ந்து, அமைச்சர் மாதவரம் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்கலைக்கழகத்தின் கல்வி, ஆராய்ச்சி, விரிவாக்கப்பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்தார். மேலும், தரமான கல்வி மற்றும் மாணவர் நலனை மேம்படுத்தும் நோக்கில் உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், பல்கலைக்கழகம் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளை பாராட்டினார்.

மேலும், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்த நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் அனு ஜார்ஜ், மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணைவேந்தர் (பொறுப்பு) டாக்டர் ஆர். நரேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். பல்கலைக்கழக அலுவலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் எஸ்.சி.எட்வின், அக்கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்களுடன், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் டி. ஏ. கண்ணன், அக்கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்களுடன் தங்களது கல்லூரி வளாகங்களிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *