மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை விரைவாக நடக்க நீதிமன்றம் மாற்றம்
1 min read
Court changed to expedite the trial in the Madapuram Ajithkumar murder case.
17.7.2026
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மீது மதுரையை சேர்ந்த நிகிதா என்ற பெண், கடந்த ஆண்டு ஜூன் மாதம் நகை திருட்டு புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் அஜித்குமாரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையின்போது போலீசார் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், மற்றொரு போலீஸ்காரர் ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய் யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சம்பவத்தின்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், போலீஸ்காரர் இளையராஜா ஆகியோருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அஜித்குமார் கொலைவழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஜூலை 29-ந்தேதியில் இருந்து மதுரை மாவட்ட 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அங்கு அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிப்பதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி இனி இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு விசாரணை விரைவாக நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.