தமிழகத்தில் ரெஸ்ட்ரோ பார் அமைக்கப்படுமா? – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
1 min read
Will ‘Restro-bars’ be set up in Tamil Nadu? – Minister Vignesh clarifies.
19.7.2026
தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபானக் கூடம்(ரெஸ்ட்ரோ பார்) கொண்டு வர அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் பரவியது. இருப்பினும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“கடந்த கால ஆட்சிகளில் டாஸ்மாக் நிர்வாகத்தை மிக மோசமான நிலையில் வைத்திருக்கிறார்கள். இன்றுகூட டாஸ்மாக் கடைகள் முன்பு சிலர் போதையில் படுத்துக்கிடப்பதும், பாட்டில்கள், கிளாஸ்களை வீசிவிட்டு செல்வதுமான செயல்களை நம்மால் பார்க்க முடிகிறது. இதை எல்லாம் மாற்றி, சீரமைக்க வேண்டும்.
அதற்கு என்னனென்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். அதில் சிலர் ரெஸ்ட்ரோ பார் குறித்து பேசினார்கள். சிலர் டாஸ்மாக் நிர்வாகத்தை தனியாருக்கு விடலாம் என்றார்கள். சிலர் அரசாங்கமே டாஸ்மாக் நிர்வாகத்தை மேம்படுத்தி தரம் உயர்த்தலாம் என்று ஆலோசனை கூறினார்கள். இதில் ரெஸ்ட்ரோ பார் என்று சொன்னது மட்டும் எப்படியே வெளியே கசிந்துவிட்டது. இதை வைத்து தவறான தகவலை பரப்பிவிட்டுள்ளனர்.
ஆனால் அரசு இதுவரை எந்த திட்டத்தையும் உறுதி செய்யவில்லை. மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறதோ, அதைத்தான் த.வெ.க. அரசு பிரதிபலிக்கும். அதேபோல், டாஸ்மாக் துறையை வைத்து அரசின் வருமானத்தை உயர்த்த நாங்கள் திட்டமிடுகிறோம் என்று யாரும் நினைக்க வேண்டாம். எதிர்க்கட்சிகள் அவ்வாறு நினைத்தால் ஏமாந்து போய்விடுவார்கள். எங்களுக்கு அந்த எண்ணம் கிடையாது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.