கடையத்தில் மர்ம நபர்களால் கொட்டப்பட்ட குப்பைகள்- டிஎஸ்பி நேரில் ஆய்வு
1 min read
Garbage dumped by unidentified persons in Kadayam – DSP inspects the site
20.7.2026
கடையத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் மர்ம நபர்களால் கொட்டப்பட்ட பலவித கழிவுகள் அடங்கிய பல நூறு மூடை குப்பைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையத்தில் இறப்பன் என்ற இடம் கீழக்கடையம் பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம். பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்கள் இறந்தால் இங்கு அடக்கம் செவ்வார்கள்.
இங்கு பல நூறு மூடை குப்பைகள் மர்ம நபர்களால் வீசப்பட்டுள்ளது.
இந்தப் பகுதி தென்காசி கடையம் சாலையில் இருந்தாலும் சாலையிலிருந்து சுமார் 500 மீட்டர் உள்ளே தள்ளி இருப்பதால் வெளியே தெரிவதில்லை. இதைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் செல்போன் கழிவுகள், மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட வயர்கள், சிறிய ரக இரும்பு கழிவுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட கழிவுகள் அடங்கிய குப்பைகள் பல நூறு மூடைகளில் கட்டி குவியல் குவியலாக வீசப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உத்தரவின் பேரில் ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் ஆய்வு செய்தார். அவருடன் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார், துணை ஆய்வாளர் மாடசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த இடத்தில் குப்பை மூட்டைகளை கொட்டிச் சென்ற மர்ம நபர்கள் யார் என்பதை வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காணொலிகளின் அடிப்படையில் விரைந்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், வட்டார சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மூலம் இந்த கழிவுகளை அகற்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அழிக்கப்படுமெனவும் துணை கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பாப்பாங்குளம் அருகே சிவஞானபுரம் எனும் கிராமத்தில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பைகள் கொட்டிச் செல்லப்பட்ட பரபரப்பு அடங்கும் முன் தற்போது கடையம் பகுதியிலும் குப்பை மூட்டைகள் வீசப்பட்டுள்ளது மக்களிடையே பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இதுபோல் சுற்றுச்சூழல் மாசுபடும் வகையிலும் பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும் செயல்படுவோரை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டுமெனவும் கேரளத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் சிறியரக மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் தமிழக கேரள எல்லையில் செயல்படும் சோதனை சாவடிகளில் சரியான முறையில் தணிக்கை செய்து தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டுமெனவும் சமூகநல ஆர்வலர்களும் பொதுமக்களும் தமிழக அரசிற்கும் காவல்துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜோசப், நிருபர்.