தென்காசியில் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வயர்மேன் கைது
1 min read
Wireman arrested in Tenkasi for accepting a bribe of Rs. 2,000.
22.7.2025
தென்காசியில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க ரூ.2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வயர்மேனை, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
தென்காசி தாலுகா, புன்னையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 37). இவர் வயரிங் காண்ட்ராக்டராக வேலை செய்து வருகிறார். இவர் தென்காசி மேட்டுத் தெருவைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் நாகராஜன் என்பவரின் 7.25 சென்ட் நிலத்தில் புதிய வீடு கட்டி, வயரிங் பணிகளை முடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து புதிய மின் இணைப்பு வேண்டி கடந்த மே 22-ம் தேதி நாகராஜன் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மின் கம்பம் நடுவதற்கும் மின் இணைப்பு கட்டணத்திற்காகவும் புகார்தாரர் மூலம் ஆன்லைனில் ரூ.13,725 மற்றும் ரூ.27,660 செலுத்தப்பட்டு, கம்பம் நடும் பணியும் முடிவடைந்தது.
இருப்பினும், மின் மீட்டர் பொருத்துவதற்கு தென்காசி மின் வாரிய அலுவலக வயர்மேன் ஆறுமுகச்சாமி (வயது 53) என்பவர் ரூ.2,000 லஞ்சம் தந்தால்தான் மீட்டர் பொருத்துவேன் என்று கறாராகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து புகார்தாரர் சண்முகசுந்தரம் பேசியபோதும், பணம் தந்தால்தான் கரண்ட் கணெக்சன் கொடுப்பேன்” என்று வயர்மேன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சண்முகசுந்தரம் இதுகுறித்து தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.2,000 பணத்தை புகார்தாரரிடம் கொடுத்தனுப்பினர்.
நேற்று முன்தினம் மின் வாரிய அலுவலகத்தில் வைத்துசண்முகசுந்தரம் வயர்மேன் ஆறுமுகச்சாமியிடம் கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைப் வயர்மேன் ஆறுமுகச்சாமி பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தென்காசி மின்வாரிய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.