July 24, 2026

Seithi Saral

Tamil News Channel

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்டு முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கம்

1 min read

Express trains to operate from Tambaram starting August

23.7.2026
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் ரூ.840 கோடியில் நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் போல ரெயில் நிலையத்தை மாற்றவும் பயணிகளுக்கு கூடுதலான வசதிகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டு 5 கட்டங்களாக இப்பணிகள் நடந்து வருகிறது.

நடைமேடைகள், பிரமாண்ட நடை மேம்பாலங்கள், பயணிகள் காத்திருக்கும் பகுதி, ஓய்வுஅறைகள், ஓட்டல்கள், வணிகப் பகுதிகள், எஸ்கலேட்டர், லிப்ட் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.

இந்த சீரமைப்பு பணிகளுக்காக அவ்வப்போது ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து ஒரு சில ரெயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் 3-வது கட்டமாக இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 500 மெட்ரிக் டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு ராடர்கள் பாலமாக நிறுவப்படுகிறது. தற்போது காந்தி இர்வின் சாலையில் எழும்பூர் ரெயில் நிலைய தாம்பரம் வழித்தட தொடக்கத்தில் இருந்து முதல் 5 நடைமேடைகளில் இரும்பு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தப் பாலம் 18 மீட்டர் அகலத்துடனும் 120 மீட்டர் நீளத்துடனும் அமைய உள்ளது. அதன்படி எழும்பூர் ரெயில் நிலைய 6-வது நடைமேடையில் இருந்து இரும்பு பாலம் புறநகர் மின்சார ரெயில்கள் செல்லும் 10 மற்றும் 11-வது நடைமேடை வரையிலான பணிகள் ஓரிரு வாரங்களில் தொடங்க இருக்கிறது.

இந்தப் பணிகள் தொடங்கும்போது புறநகர் மின்சார ரெயில் சேவை பாதிக்காமல் வேறு நடைமேடைக்கு மாற்ற வேண்டி உள்ளது. புறநகர் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்படாமல் ரெயில்களை இயக்குவது குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி ஆகஸ்ட் மாதம் முதல் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் சிலவற்றை தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டத்திற்கு இயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. அவற்றில் சில ரெயில்களை மட்டும் தாம்பரத்தில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரும்பு நடைமேம்பால பணியை சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் நேற்று ஆய்வு செய்தார். அவரிடம் பணிகள் நடைபெறும் நிலை குறித்தும் அதற்காக 5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகளுக்கு புறநகர் மின்சார ரெயில்களை மாற்றி இயக்குவது குறித்தும் ரெயில்வே பொறியாளர்கள் விளக்கிக் கூறினார்கள்.

இந்த ஆய்வின்போது தெற்கு ரெயில்வே கூடுதல் மேலாளர் செந்தில்குமார், எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெயகாந்தன், பொறியாளர் லோகநாயகி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *