பாராளுமன்றத்தில் கடும் அமளி- இரு அவைகளும் ஒத்திவைப்பு
1 min read
Uproar in Parliament – Both Houses adjourned
28/7/2026
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பாராளுமன்ற, மழைக்கால கூட்டத்தொடர் கடந்த, 20ல் தொடங்கிய நிலையில், ‘நீட்’ வினாத்தாள் கசிவு தொடர்பாக டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டம் நாடு முழுதும் பரவியது. பாராளுமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்த நிலையில், கூட்டத்தொடர் நடக்காமல், இரு சபைகளிலும் எந்த அலுவலும் நடக்காமல் முடங்கி வருகின்றன.
இந்நிலையில் இன்றும் (ஜூலை 28) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கண்டு கொள்ளாமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.
பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மீது இன்று ( ஜூலை 28) மதியம் 2 மணிக்கு விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதத்தில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ராஜ்யசபாவிலும் காலை 11 மணிக்கு அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி ஒத்திவைக்கப்பட்டது.