August 13, 2026

Seithi Saral

Tamil News Channel

தொகுதி மறுவரையறை குறித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்

1 min read

Chief Minister Vijay writes to Prime Minister Modi regarding constituency delimitation.

தொகுதி மறுவரையறை குறித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம்
சென்னை,
13.8.2026
தமிழ்நாடு முதல்-அமைச்சர், மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலித்து, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இந்தியப் பிரதமர்நரேந்திர மோடி அவர்களுக்கு இன்று (13.8.2026) கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

அக்கடிதத்தில், நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்தல், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் ஆகிய பொருண்மைகள்மீது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் குறித்து இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 12.8.2026 அன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்றும், அத்தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் அதே நிலையில் நிரந்தரமாகத் தொடர்வதற்கும், மாநிலங்களின் தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ அளவைப் பாதுகாப்பதற்கும் (அதாவது, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான தற்போதைய விகிதாச்சாரப் பகிர்வை ஏற்கெனவே உள்ளவாறே தொடர்வதற்கும்), மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான விகிதத்தைப் (2.2 : 1) பேணுவதற்கும், தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தியிருப்பதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, நல்ல பொருளாதார வளர்ச்சியை எய்தி, சிறப்பான சுகாதார மற்றும் பொதுநலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டு, தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் எந்தவொரு மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதி இழைப்பதாக அமையுமென்றும் அக்கடிதத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(i) மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆக நிரந்தரமாக்கப்பட வேண்டும்;

(ii) மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதைய அளவிலேயே நிரந்தரமாக்கப்பட வேண்டும்; அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய இடப் பகிர்வு முறை தொடர வேண்டும்.

(iii) எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தல்களிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு (1/3) இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்துகிறது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை இணைத்திருப்பதாகவும். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தைப் பரிசீலித்து, இது தொடர்பான உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமரை கனிவுடன் கேட்டுக் கொள்வதாகவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கும் அவர்களின் மீன்பிடிப் படகை மீட்பதற்கும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கர் அவர்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் விஜய் எழுதி உள்ள கடிதத்தில் கூறியதாவது:-

12.08.2026 அன்று இரவு, IND-TN-10-MM-329 என்ற பதிவு எண்ணைக் கொண்ட மீன்பிடி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதேபோன்று இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீனவ சமூகத்தினரிடையே, குறிப்பாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில், மிகுந்த கவலையையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தகுந்த தூதரக நடவடிக்கைகள் வாயிலாக இலங்கை அரசிடம் இக்கோரிக்கையை முன்வைத்து, சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் விரைவாக விடுவித்து, அவர்கள் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்புவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கும், தமிழ்நாட்டு மீனவ சமூகத்தினருக்கும் இவ்விவகாரத்தில் பெரும் நம்பிக்கையையும் நிம்மதியையும் அளிக்கும். இப்பொருண்மை குறித்து மத்திய வெளியுறவுத் துறை மந்திரியின் உடனடித் தலையீட்டைத் தான் எதிர்நோக்குவதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *