August 15, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவை கல்லூரி மாணவர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

1 min read

Three more arrested in Coimbatore college student murder case

13.8.2026
கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன்(வயது 19) என்ற மாணவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி அவர் சகமாணவர்களால் அமுதன் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 4-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஆரமுதன் (20), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த அரவிந்த் (21), தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலம் சிவா ரோகித் (20), பெரம்பலூர் மாவட்டம் குன்னம்பகுதியை சேர்ந்த மணி பாலு (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்திருந்தனர். தொடர்ந்து சந்தோஷ் என்ற மற்றொரு மாணவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கல்லூரி மாணவன் அமுதன் கொலை வழக்கில், தற்போது மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி ஸ்ரீராம், ஹரீஷ் பாண்டியன் மற்றும் லலித் ஆதித்யா ஆகிய 3 பேரை செட்டிபாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம், இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

கொலை பற்றிய தகவல்

கள்ளக்குறிச்சி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் கென்னடி இவருடைய மகன் அமுதன் (வயது 19). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். அந்த அறையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமன் (19) உள்பட 4 பேர் தங்கி இருந்தனர்.

அமுதன், ஸ்ரீமன் ஆகியோர் ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள தனது நண்பர்களின் அறைக்கு சென்று தங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று காலை 8.30 மணிக்கு கல்லூரிக்கு செல்ல மலுமிச்சம்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அதே கல்லூரியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் அந்த 2 பேரையும் மிரட்டி தங்களது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதையடுத்து, நீங்கள் தானே நேற்று எங்கள் அறைக்கு வந்து தாக்கிவிட்டு செல்போனை பறித்தது என்று கேட்டனர். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தி, அரிவாள் மற்றும் ஆயுதங்களால் அமுதனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதையடுத்து 2 பேர், அமுதனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி விடுதியில் அவரின் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் அவரை கத்தி, அரிவாளை மாற்றி பிடித்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அமுதன் மயங்கி கிடந்தார். மதியம் 1.30 மணிக்கு சாப்பிட வந்த மாணவர்கள் அறையில் அமுதன் அசைவற்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் அமுதனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அமுதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *