சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
1 min read
Pension for freedom fighters raised to Rs. 25,000 – Chief Minister Vijay announces
15/8/2026
80-வது சுதந்திர தின விழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிவைத்த முதலமைச்சர் ஜோசப் விஜய், சுதந்திர தின விழா உரையாற்றினார்.
அப்போது முதலமைச்சர் விஜய் கூறியதாவது:-
கோட்டையில் கொடியேற்றுவதை பார்க்க வந்துள்ள மக்களுக்கும், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் பிரபலமானவர்கள் உள்பட பெயர் தெரியாத ஒவ்வொரு சுதந்திர வீரர்களுக்கும் எனது வீர வணக்கங்கள்.
அனைவரும் ஒன்று சேரும்போதுதான் சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தும் உடைந்து நொறுங்கும். ஊழலற்ற தமிழகம் என்பதை நோக்கியே நமது அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த விழாவில் என்னை பேச வைத்த உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்கள், GenZ இளைஞர்களுக்கு நன்றி
வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகத்தை நோக்கமாக கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.
தமிழக மக்கள் நலனுக்காக மட்டுமே நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்பு தருகிறோம். தமிழக நலனுக்கு எதிராக மாநில உரிமைக்கு பிரச்சனையாக எது வந்தாலும் தவெக அரசு எதிர்க்கும்.
முன்னாள் படை வீரர்களின் 2 மகள்களுக்கு வழங்கும் திருமண நிதியுதவி ரூ.25,000 இருந்து ரூ.50,000- ஆக உயர்வு.
விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாநில அரசின் ஓய்வூதியம் ரூ.25,000-ஆக உயர்த்தப்படுகிறது.
மாற்றுத்திறன் கொண்ட முநன்னாள் படைவீரர்களின் குடும்பத்திற்கான மாதாந்திர நிதியுதவி ரூ.5000-ல் இருந்து ரூ.7000-ஆக உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:-
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே ஈந்த எண்ணற்ற தியாகிகளையும், ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராக அஞ்சாது களமிறங்கிப் போராடிய தேசத் தலைவர்களையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்ந்து, மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், தமிழ்நாட்டிற்கு என்றும் ஒரு தனித்துவமான, மகத்தான இடமுண்டு. அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக அச்சமின்றி எழுந்த முதல் குரலும், விடுதலை வேட்கையை மக்கள் மனங்களில் விதைத்த வீர உணர்வும் இந்த தமிழ் மண்ணிலிருந்தே வலிமை பெற்றன. இத்தகைய வீரத்தையும், தேசப்பற்றையும் விதைத்திட்ட தியாக சீலர்கள் கண்ட கனவுகளை நிறைவேற்றுவோம்.
நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணிக்காத்து, அனைத்து குடிமக்களின் நலனையும் முன்னிறுத்தி, சமத்துவமும் சமூகநீதியும் ஜனநாயகமும் தழைத்தோங்கும் இந்தியாவை உருவாக்கிட இந்நன்னாளில் உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.