வெய்காலிப்பட்டி கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி
1 min read
Drug awareness rally at Veykalipatti College
17.8.2026
வெய்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள குருசுவாமி திருமண மண்டபத்தில், வெய்காலிப்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் (என்.எஸ்.எஸ்.) சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் செல்வராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் குளோரி தேவ ஞானம் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜோசப் அருண் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு கொடியசைத்து தொடங்கி வைத்து, போதைப்பொருள் பழக்கம் தனிநபரின் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை மட்டுமின்றி, குடும்பம் மற்றும் சமூகத்தையும் பாதிக்கக்கூடியது என்பதால் இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து விலகி, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 50-க்கும் மேற்பட்ட புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய போதைப்பொருளுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியவாறும், பல்வேறு வேடங்கள் அணிந்தும், பேரணியாக சென்றனர். போதைப்பொருளைத் தவிர்ப்போம், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம், போதை இல்லா சமூகத்தை உருவாக்குவோம் உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் கிளாஸ்டன் ஜோஸ், பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் வேல்கனி, துணை காவல் ஆய்வாளர் ராஜேஷ்குமார் மற்றும் காவல்துறையினர், முனைவர் முத்துமணி, திபன் பாக்கியராஜ், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-ஜோசப்-செய்தியாளர்.