முதல்-அமைச்சர் அலுவலகம் ஏன் மாற்றப்படுகிறது? – ஆதவ் அர்ஜுனா விளக்கம்
1 min read
Why is the Chief Minister’s office being changed? – Adhav Arjuna explains
18.8.2026
முதல்-அமைச்சர் அலுவலகம் ஏன் மாற்றப்படுகிறது? என்பது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.
புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த முதல்-அமைச்சர் அலுவலகம் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்ட உள்ளது. இதற்காக, மாளிகையின் 10-வது தளத்தில் புதிய முதல்-அமைச்சர் அறை, தனிச் செயலர்களுக்கான அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முதல்-அமைச்சரின் புதிய அலுவலகத்தை அமைக்கும் பணிகளுக்காக ரூ.5.54 கோடியில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை டெண்டர் கோரியிருந்தது. தமிழக அரசின் பொதுப்பணித் துறை கோரிய இந்த டெண்டரில் பல்வேறு முறைகேடுகளும் விதிமீறல் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சட்டசபையில் திமுக கொறடா எ.வ.வேலு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்து பேசியதாவது:-
“திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில் பத்திரிகை செய்தியைக் குறிப்பிட்டு பேசினார். கடந்த 5 ஆண்டுகள் பத்திரிகை செய்திகளை எடுத்து வெளியிட்டால், இந்த துறை (பொதுப்பணித் துறை) ஊழல் மட்டும்தான் செய்திருக்கும் என்று எங்களாலும் சொல்ல முடியும். டெண்டரே இன்னும் முடியவில்லை. பொதுவாக கட்டுமான தொகைக்கு ஏற்ப டெண்டரின் மொத்த மதிப்பை வெளியிடுவார்கள். 3-லிருந்து 7 சதவிகிதம் வரை ஏற்றுவார்கள். ஆனால், நாங்கள் கடந்த ஆண்டு மதிப்பையே கொடுத்துள்ளோம்.
விரைவில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் கடந்த 5 ஆண்டுகள் டெண்டரில் என்ன நடந்தது என்பதை வெள்ளை அறிக்கையை வெளியிடவுள்ளோம். கடந்த 60 நாள்களில் 20 டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. சுமார் 25-லிருந்து 30 சதவிகிதம் வரை குறைவான தொகையில் டெண்டர் வந்துகொண்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள். இதில் அனைவருக்கும் உடன்பாடு இருக்கிறது. காலையிலிருந்து மாலை வரை அரசு அதிகாரிகளையும், வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் முதல்-அமைச்சர் சந்தித்து வருகிறார்கள். அனைவரையும் சந்திக்க வேண்டுமென்பதால்தான் அறையை மாற்றுகிறார்கள்.
முதல்-அமைச்சரின் தனிச் செயலர்கள் வெறும் 100 சதுர அடிகூட இல்லாத சிறிய அறையில் பணி செய்து கொண்டுள்ளார்கள். முறையான கழிப்பறை வசதிகூட கிடையாது. ஆகையால்தான் அவர்களுக்கும் அறை மாற்றப்படுகிறது. பிரசாரத்தின் போது சாதாரணக் கடைகளில் கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டுவிட்டு, பிரசார வாகனத்திலேயே இரண்டு மணிநேரம் ஓய்வெடுக்கக் கூடிய எளிய முதல்-அமைச்சரைப் பற்றி தவறான தகவலை அவைக்கு தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.