August 20, 2026

Seithi Saral

Tamil News Channel

டெல்லி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி; 3-வது மொழி கட்டாயம்

1 min read

Vocational education in Class 9 in Delhi schools; third language mandatory.

18.8.2026

டெல்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மற்றும் தேர்ச்சி முறையில் அதிரடி மாற்றங்களை டெல்லி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் வரும் 2026-27 கல்வியாண்டு முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளன. மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு அறிவை வளர்க்கும் நோக்கில் இந்த புதிய பாடத்திட்டமும், தேர்வு முறையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி முறையின்படி, 9-ஆம் வகுப்பு மாணவர்கள் இனி 6 முக்கிய பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும். மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் – 2, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் தொழிற்கல்வி ஆகிய பாடங்களை கட்டாயம் பயில வேண்டும்.

மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்கு தேர்ச்சி பெறுவதை இந்த 6 முக்கிய பாடங்களின் மதிப்பெண்களே தீர்மானிக்கும். மாணவர்களுக்கு சிறுவயதிலேயே வேலைவாய்ப்பு மற்றும் திறன் சார்ந்த கல்வியை வழங்க தொழிற்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்த அதே மூன்று மொழிகள் கொண்ட கூட்டணியே 9-ஆம் வகுப்பிலும் தொடரும். அதில் ஒரு மொழி 3-வது மொழியாக கருதப்படும். இந்த 3-வது மொழிக்கான தேர்வு பள்ளி அளவிலேயே நடத்தப்படும். மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களுக்குப் பதிலாக ‘தகுதி பெற்றார்’ அல்லது ‘தகுதி பெறவில்லை’ என்பது மட்டும் குறிப்பிடப்படும்.

இதில் முக்கியமாக 9-ஆம் வகுப்பில் இந்த 3-வது மொழியில் தேர்ச்சி பெறாவிட்டாலும், மற்ற பாடங்களில் தேர்ச்சி

பெற்றிருந்தால் மாணவர்கள் 10-ஆம் வகுப்பிற்கு தற்காலிகமாகஅனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால்,10-ஆம் வகுப்பில் படிக்கும்போதே 9-ஆம் வகுப்பின் இந்தமொழித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். 3-வது மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

தற்போது நடைமுறையில் உள்ள ‘Mathematics Basic’ மற்றும் ‘Mathematics Standard’ முறைகள் 2026-27 கல்வியாண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு நீக்கப்படுகின்றன. ஆனால், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த பழைய முறை 2026-27-ல் தொடரும். அதற்குப் பதிலாக புதிய முறை அறிமுகமாகிறது. அனைத்து மாணவர்களுக்கும் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பொதுவான தேர்வு நடத்தப்படும். பாடப்புத்தகத்தைத் தாண்டி, கூடுதல் திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் மாணவர்கள் Mathematics Advanced அல்லது Science

Advanced (அல்லது இரண்டையும்) தேர்வு செய்து எழுதலாம். இந்த ‘Advanced’ தேர்வுகள் 25 மதிப்பெண்களுக்கு, 1 மணி நேரம் நடக்கும்.

இதில் சிந்தனைத் திறனை சோதிக்கும் கேள்விகள் கேட்கப்படும்.இதில் பெறும் மதிப்பெண்கள் மாணவர்களின் தேர்ச்சிக்கோ அல்லது மொத்த மதிப்பெண் சதவீதத்திற்கோ கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

ஆனால், இந்த ‘Advanced’ தேர்வில் 50% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் சாதனை அவர்களது மதிப்பெண் சான்றிதழில் தனியாகப் பதிவு செய்யப்படும். ‘சமூகத்தில் தனிநபர்கள்’, கலைக் கல்வி, உடற்கல்வி மற்றும் நல்வாழ்வு ஆகிய துறைகளும் பள்ளி அளவிலான மதிப்பீடுகளுடன் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

கணினி சிந்தனை மற்றும் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் 2026-27-ல் ஒரு சிறப்புப் பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் 2027-28 கல்வியாண்டு முதல் கட்டாயப் பாடமாக மாற்றப்படும். 9-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ஆம் வகுப்பிற்குச் செல்ல மாணவர்கள் 6 முக்கிய பாடங்களிலும், அகமதிப்பீடு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகிய இரண்டிலும் தனித்தனியாகக் குறைந்தது 33% மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆண்டு இறுதித் தேர்வில் மட்டும் குறைந்தது 25% மதிப்பெண்கள் எடுத்திருப்பது அவசியமாகும்.

6 முக்கிய பாடங்களில் 3 பாடங்கள் வரை தோல்வி அடையும் மாணவர்கள், துணைத் தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவர். துணைத் தேர்விலும் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தேர்ச்சி பெற முற்றிலும் தகுதி இல்லாத மாணவர்கள் ‘Essential Repeat’ (கட்டாய மறுபடி) பிரிவின் கீழ் வைக்கப்பட்டு, மீண்டும் அதே 9-ஆம் வகுப்பிலேயே படிக்க நேரிடும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *