August 27, 2026

Seithi Saral

Tamil News Channel

நேபாளத்தை திணறடிக்கும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது எப்படி?- இந்தியாவுக்கும் ஆபத்தா?

1 min read

How did the flash floods overwhelming Nepal occur? Is there a danger to India as well?

27.8.2026
இந்தியாவின் எல்லைக்கு அருகே இமயமலையை ஒட்டி அமைந்துள்ள அண்டை நாடு நேபாளம். அந்நாட்டின் திபெத் எல்லையோரம் அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் பாயும் போதே கோஷி நதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 200க்கும் அதிகமானோர் உயிரை பலிவாங்கியுள்ளது.

400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து கைலாஷ் மானசரோவர் புனித பயணம் மேற்கொண்ட பக்தர்களில் 133 பேரும் அடங்குவர்.

சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். ரசுவாவுடன் சேர்த்து தாடிங், நுவாகோட் ஆகிய மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. பல கிராமங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியா முதற்கட்டமாக விமானப்படை விமானம் மூலம் புதன் நள்ளிரவில் தற்காலிக கூடாரங்கள், கம்பளிகள், சோலார் விளக்குகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட 10 டன் எடைகொண்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.

இந்தியப் பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்ததோடு, நேபாளத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும் என உறுதியளித்துள்ளார்.

ரசுவா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், நேபாள ராணுவமும் காவல்துறையும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், பல இடங்களுக்கான போக்குவரத்து பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் சிக்கல் நீடிக்கிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். வெள்ளப் பாதிப்புகள் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்கப்படும் அதிரவைக்கும் காட்சிகளும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

பொதுவாகக் கனமழை பெய்யும்போது நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். மழையை முன்கூட்டியே கணித்து, நதிக்கரையோர மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதன் மூலம் உயிர்ச்சேதங்களை தவிர்க்க முடியும். ஆனால் நேபாளத்தில் நிகழ்ந்தது முற்றிலும் வித்தியாசமான, யாரும் கணிக்க முடியாத ஒரு வெள்ளப்பெருக்கு. இது எவ்வாறு நிகழ்ந்தது என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

இந்த அசம்பாவிதத்திற்கு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவே காரணம் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் சிஷிர் கனால் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

புதன் அன்று காலை 8:30 மணிக்குத் திபெத் பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் பதிவுகள் காட்டுகின்றன.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாகத் திபெத்தில் பனிப்பாறைகளும் பாறைகளும் சரிந்து, திபெத் – சீனா எல்லையில் உற்பத்தியாகும் லெண்டே கோலா என்ற நதியில் விழுந்து அதன் நீரோட்டத்தை அடைத்ததாக முதற்கட்டமாக சொல்லப்பட்டது.
ஆனால், இமயமலை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் “ஒருங்கிணைந்த மலை வளர்ச்சிக்கான சர்வதேச மையம்” (International Centre for Integrated Mountain Development) அமைப்பை சேர்ந்த நிபுணர்களின் முதற்கட்ட ஆய்வில், இமயமலையின் அதி உயர பகுதியில் ஏற்பட்ட பனி மற்றும் பாறைச் சரிவு லெண்டே கோலா நதியில் விழுந்து நீரோட்டத்தைத் தடுத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு நிலநடுக்கம் பதிவாகியிருந்தாலும், அதற்கும் பனிப்பாறை சரிவுக்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பாறைகள் சரிந்து நீரோட்டம் தடைப்பட்டதால், லெண்டே கோலா நதியில் பெருமளவு நீர் தேங்கி நீர்மட்டம் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அணை போல் தேங்கியிருந்த அந்த அடைப்பு உடைந்தது. இதனால் தேங்கியிருந்த நீர் ஒரே நேரத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்தது.

இந்த லெண்டே கோலா நதி நேபாளத்தின் ரசுவா மாவட்டத்திற்குள் நுழையும் போது போதே கோஷி நதி என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு பெருமளவிலான நீர் ஒரே நேரத்தில் கீழ்நோக்கி வந்ததால் தான் போதே கோஷி நதியில் திடீர் பெருவெள்ளம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா – நேபாள எல்லையில் உள்ள லெண்டே கோலா நதியில் இன்னும் பாறை அடைப்புகள் இருப்பதால், மீண்டும் ஒரு வெள்ளப்பெருக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பீகார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லை மாநிலங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் போதே கோஷி என்றும் திபெத்தில் லெண்டே கோலா என்றும் அழைக்கப்படும் இந்த நதியில் கடந்த 14 மாதங்களில் இரண்டு முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போதைய பாதிப்பு மிக அதிகம் என்பதால் இது பரவலாக கவனத்தை பெற்றுள்ளது.

நிலநடுக்கம் இல்லையென்றால் இமயமலையில் உறைநிலையில் உள்ள பனி மற்றும் பாறைகள் சரிந்தது ஏன் என்ற கேள்வி எழலாம்.
நிலநடுக்கம் மட்டுமே பனிச்சரிவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இமயமலையில் உள்ள பாறைகளையும் பனிப்பாறைகளையும் பிணைத்து வைத்திருப்பது ‘பெர்மா ப்ராஸ்ட்’ எனப்படும் அமைப்பாகும்.

ஆண்டுக் கணக்கில் உறைந்துபோயிருக்கும் மண் மற்றும் பனி அடுக்கே இந்த பெர்மாஃப்ராஸ்ட்.

தற்போது தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் காரணமாக உறைநிலையில் உள்ள இந்த பெர்மா ப்ராஸ்ட் உருகும்போது, பாறைகளுக்கும் பனிக்குமான பிடிப்பு தளர்வடைகிறது. இதனால் புவியீர்ப்பு விசையின் காரணமாக அவை மேலிருந்து சரிந்து கீழே விழுந்து நதியின் நீரோட்டத்தை அடைக்கின்றன. கோடைக் காலம் மற்றும் பருவமழைக் காலத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது.

பனி, பனிப்பாறைகள், பெர்மாஃப்ராஸ்ட் ஆகிய மூன்றும் சேர்ந்ததே ‘உறைபனி மண்டலம்’ எனப்படுகிறது. இது காலநிலை மாற்றத்தால் மிக வேகமாக உருமாறி வருகிறது. இமயமலைப் பனிப்பாறைகள் உலகச் சராசரியை விட அதிவேகமாக உருகி வருகின்றன.

புவி வெப்பமயமாதல் காரணமாக இமயமலைப் பகுதியில் வெப்பநிலை உலகளாவிய சராசரியை விட 2 முதல் 3 மடங்கு வேகமாக உயர்ந்து வருகிறது.

இமயமலையில் நடக்கும் மாற்றங்கள் நேபாளத்தோடு நின்றுவிடாது; அது இந்தியாவிற்கும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்.

நேபாளத்தில் பாயும் போதே கோஷி, திரிசூலி போன்ற நதிகள் இந்தியாவின் கங்கை நதி அமைப்பில்தான் இணைகின்றன. நேபாளத்தில் இயற்கை அணைகள் உடைந்தால், அடுத்த சில மணிநேரங்களில் பீகார், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

இத்தகைய எல்லை கடந்த பேரழிவுகளைச் சமாளிக்க இந்தியா, நேபாளம், சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

160 பேர் பலி.. 133 இந்தியர்கள் மாயம் – நேபாள வெள்ள பாதிப்பின் வீடியோ, புகைப்படங்கள்
திபெத்தை ஒட்டிய நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், போதே கோஷி ஆற்றில் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 133 இந்தியர்கள் உட்பட சுமார் 400 பேர் மாயமாகியுள்ளனர்.

“பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும், நாடு முழுவதும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று நேபாள பிரதமர் பாலேந்திர ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் மோடி, நேபாள பிரதமருடன் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து நிவாரணப் பொருட்களையும் மனிதநேய உதவிகளையும் வழங்க இந்தியா தயார் என உறுதி அளித்துள்ளார்.

நேபாளத்தில் பெருகிவரும் வெள்ளத்தால், அதை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேச எல்லைப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *