நேபாளத்தில் தமிழர்கள் 100 பேரை மீட்கும் பணி தீவிரம்-அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
1 min read
Efforts to rescue 100 Tamils in Nepal intensified: Minister Rajmohan speaks to the press
30.8.2026
பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டு, பள்ளி கல்வி, கூட்டுறவு துறை மூலம் ரூ.4.46 கோடியில் கடப்பட்ட 13 புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், பல்வேறு துறை சார்பில் 166 பயனாளிகளுக்கு ரூ.1.42 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நேபாளத்தில் கடந்த 26ம் தேதி ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கியவர்களை மீட்க தமிழக அரசு போராடி வருகிறது. இதில், தமிழகத்திலிருந்து சென்ற 319 பேரில், 219 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தமிழகம் திரும்பியுள்ளனர். இன்னும் 100 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அமைச்சர் தென்னரசு டெல்லியில் முகாமிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகிறார். காணாமல் உள்ள 100 தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள் டெல்லிக்கே வந்தார்கள். அவர்களை நேரில் அழைத்து பேசி ஆறுதல் தெரிவித்தோம். இதற்கு தமிழக அரசு வேதனை அடைகிறது. எப்படியாவது அவர்களை மீட்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பெரம்பலுாரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படக்கூடிய எல்லா உதவிகளையும் அரசு செய்து தரும். தீ விபத்து குறித்து சீராய்வு செய்து காப்பீடு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்று தரப்படும். அரசு மற்றும் தனியார் துறை பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிப்பது குறித்து, தமிழக அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பற்றி அனைத்து துறைகளிடமும் கலந்து பேசி பெண்கள் நலன் சார்ந்த ஒரு சுமுக முடிவு எடுக்கப்படும்.
தமிழக சட்டசபையில் இடஒதுக்கீடு தொடர்பான மானிய கோரிக்கையில், பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கான வரலாற்று பதிவில் முன்னாள் பிரதமர் நேரு, அம்பேத்கர் மற்றும் ஈ.வெ.ரா., உள்ளிட்டோரது பெயர் நீக்கப்பட்டது, கண்டிப்பாக இது திட்டமிட்டு யாரும் செய்யவில்லை. தி.மு.க., ஆட்சியில் 3 முறை இது போல் பெயர் இல்லாமல் வந்துள்ளது. அவர்கள் எங்களுடைய கொள்கை தலைவர்கள். அவர்கள் இந்த மண்ணுக்காக உழைத்தவர்கள். அதிகாரிகள் மத்தியில் அதை விசாரித்து, முதல்வரிடம் இது பற்றி கலந்து பேசி முடிவு செய்யப்படும்.
வரும் மே மாதத்துக்குள்ள மறுபடியும் தேர்தல் வரும், நாங்கள் தான் வருவோம் என தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்., பாரதி கூறி வருகிறார். அவருக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன். கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.