வடமதுரை அருகே பால் வேன் மோதிய விபத்தில் 4 குழந்தைகள் பலி
1 min read
Four children killed after being hit by a milk van near Vadamadurai.
31.8.2026
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை கொல்லப்பட்டி சமத்துவப்புரம் அடுத்த தோட்டத்து வீட்டில் வசிப்பவர் பழனிச்சாமி. இவரது மனைவி அஞ்சலை (60). இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் அஞ்சலை தனது மகன், மகள் வழி பேரன், பேத்திகள் 6 பேருடன் ஆடுகளை மேயவிட்டு அங்குள்ள புத்துார் சாலையோரம் அமர்ந்திருந்தார்.
அப்போது கொல்லப்பட்டியில் இருந்து புத்துார் சென்ற சரக்கு வேன் தாறுமாறாக வந்ததை கண்ட இரு குழந்தைகள் எழுந்து தப்பி சென்றனர். எஞ்சிய 5 பேர் மீதும் மோதிய வேன் நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் அஞ்சலை, அவரது மகன் நாகராஜ் வழி பேத்திகளான யோகவர்ஷினி (11), அனன்யா (6), செம்மடையை சேர்ந்த மகள்கள் வழி பேரன் மோஷிகிரண் (6), பேத்தி கணுஸ்ரீ (3) ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அஞ்சலை கவலைக்கிடமான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.