August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானின் உயரிய விருது

1 min read
Prime Minister Modi honored with Uzbekistan's highest award.

30.8.2026
உஸ்பெகிஸ்தானின் அதிபர் ஷவ்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

உஸ்பெகிஸ்தானில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி அதிபருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளார். இந்திய விமானங்கள் செல்ல தடை விதித்து பாகிஸ்தான் வான்பரப்பு மூடப்பட்டதால் பிரதமர் மோடி சீனா வழியாக உஸ்பெகிஸ்தான் சென்றார்.

தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை அந்த நாட்டு ​​அதிபர் மிர்சியோயேவ் ஆரத்தழுவி வரவேற்றார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தாஷ்கண்டில் முக்கிய கட்டிடங்கள் இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் ஒளிரவிடப்பட்டிருந்தன. இது பிரதமர் மோடியின் உஸ்பெகிஸ் தானுக்கான 4-வது பயணமாகும்.

தொடர்ந்து பிரதமர் மோடிக்கு தாஷ்கண்டில் உள்ள ஒரு ஓட்டலில் இந்திய வம்சாவளியினர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடி யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவிற்குச் சென்று, சுதந்திர நினைவுச் சின்னத் தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

பங்கேற்பாளர்கள் குழுவாக யோகா செய்து கொண்டிருந்தபோது, ​​பிரதமர் மோடி அந்த இடத்தை சுற்றி வந்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

முடிவில் பங்கேற்பாளர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்று மதியம் பிரதமர் மோடியும், உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்சியோயேவும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்

2 நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன், பாதுகாப்பு, டிஜிட்டல் தொடர்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

மேலும், விக்சித் பாரத் 2047 மற்றும் யாங்கி உஸ்பெகிஸ்தான் 2030 ஆகிய 2 நாடுகளின் பகிர்ந்தளிக்கப்பட்ட வளர்ச்சிக்கான பார்வையை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் ஆலோசிக்கின்றனர்.

முன்னதாக உஸ்பெகிஸ்தான் விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடியும், அதிபர் மிர்சியோயேவும் அதிபர் மாளிகைக்கு ஒரே காரில் பயணம் செய்தனர்.

அதிபர் மாளிகையில் இரவு விருந்துடன் கூடிய சந்திப்பு நடைபெற்றது. பிரதமர் மோடி முதன்முறையாக 2014-ம் ஆண்டு அமெரிக்கப் பயணத்தின்போது, ​​அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் காரில் பயணம் செய்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிற்காக சீனா சென்றிருந்தபோது, ​​பிரதமர் மோடி விளாடிமிர் புதின் பயணித்த அதே காரில் பயணம் செய்தார்.

இதற்குப் பிரதிபலனாக, சில மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் மாதம் ரஷிய அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்தபோதும் அவருடன் பிரதமர் மோடி ஒரே காரில் சென்றார்.

அதன் பிறகு, பிரதமர் மோடி பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இத்தாலிய பிரதமர் ஜார் ஜியா மெலோனி, ஜெர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் காரில் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உஸ்பெகிஸ்தானின் உயரிய விருதான ஒலி தரஜாலி டஸ்ட்லிக் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ் தான் நாட்டுக்கு செல்கிறார்.

உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *