ஆந்திராவில் மலேரியா எதிர்ப்பு மாத்திரை தின்ற 2-ம் வகுப்பு சிறுமி உயிரிழப்பு
1 min read
Class 2 girl dies in Andhra Pradesh after taking anti-malaria tablet.
2/9/2026
குளோரோகுயின் (Chloroquine) என்பது ஒரு ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தாகும். இது மலேரியா ஒட்டுண்ணிக்கு நச்சுத்தன்மை வாய்ந்த ஹீம் (heme) எனும் பொருளின் அளவை ரத்தத்தில் அதிகரிப்பதன் மூலம் மலேரியாவைக் குணப்படுத்துகிறது. இது ஒட்டுண்ணியை அழித்து, தொற்று பரவுவதைத் தடுக்கிறது.
ஆந்திரா- தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள போலவரத்தில் உள்ளது கொல்லகுப்பா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 71 பேருக்கு மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது. மாத்திரை உட்கொண்டவர்களில் பலருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதாவது காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் சுமார் 29 பேரை தெலுங்கானாவில் உள்ள மருத்துவமனையிலும், 24 பேரை உள்ளூர் சுகாதார மையத்திலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாதிவி ஜமுனா என்ற 7 வயது மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வரும் மற்றவர்கள் நிலை சீராக உள்ளது. இது தொடர்பாக அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் மூன்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுக்களைப் பணியமர்த்தியுள்ளது. இவர்கள் சிகிச்சை பெற்று வரும் நபர்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
சிறப்பான சிகிச்சை அளிக்க ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சம்பவம் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார்.
காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு அந்த கிராமத்தை வந்தடைந்துள்ளது. விஜயவாடா, ராஜமகேந்திரவரம் மற்றும் காக்கிநாடாவிலிருந்து மேலும் மூன்று குழுக்கள் அவர்களுடன் இணையவுள்ளன.