மத்திய அரசு துறைகள் மீது 70,584 ஊழல் புகார்கள்
1 min read
70,584 corruption complaints against Central Government departments
3.9.2026
2025-ஆம் ஆண்டில் அரசு அமைப்புகளுக்கு எதிராக 70,500-க்கும் மேற்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதிலும், வங்கிகள் மற்றும் ரெயில்வே மீது அதிக புகார்கள் வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் 2025-ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகள் மீது 2025-ம் ஆண்டில் 70 ஆயிரத்து 584 ஊழல் புகார்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வங்கிகள் மீது அதிகபட்சமாக 9 ஆயிரத்து 933 புகார்களும், ரெயில்வே மீது 9 ஆயிரத்து 381 புகார்களும் பதிவாகியுள்ளன.
மொத்த புகார்களில் 64 ஆயிரத்து 905 புகார்கள் டிசம்பர் 31-ந்தேதி நிலவரப்படி முடித்து வைக்கப்பட்டன. மீதமுள்ள 5 ஆயிரத்து 679 புகார்கள் விசாரணையில் உள்ளன.
நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மீது 6 ஆயிரத்து 531, உள்ளாட்சி அமைப்புகள் மீது 4 ஆயிரத்து 834, நிலக்கரி துறை ஊழியர்கள் மீது 4 ஆயிரத்து 118, நிதித்துறை மீது 3 ஆயிரத்து 107 புகார்கள் பெறப்பட்டு உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் டெல்லி அரசுக்கு எதிராக 2,804 புகார்கள், பெட்ரோலிய அமைச்சகத்துக்கு எதிராக 2,722 புகார்கள் பெறப்பட்டுள்ளது. டெல்லி போலீசாருக்கு எதிராக 2,633 புகார்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு எதிராக 2,139 புகார்கள், டெல்லி போலீஸ் தவிர்த்து உள்துறை அமைச்சகம் தொடர்பாக 2,036 புகார்களும் பெறப்பட்டன.
மனிதவள மேம்பாட்டு துறைக்கு எதிராக 2,030 புகார்கள், தொழிலாளர் நல அமைச்சகத்துக்கு எதிராக 1,894 புகார்கள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக 1,536 புகார்கள், தொலைத்தொடர்பு துறைக்கு எதிராக 1,469 புகார்களும் பதிவாகின. ராணுவ அமைச்சகம் தொடர்பாக 1,410 புகார்கள், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்துக்கு எதிராக 1,123 புகார்கள், எக்கு துறை தொடர்பாக 1,023 புகார்கள், அஞ்சல் துறைக்கு எதிராக 1,003 புகார்களும் பெறப்பட்டன. ஊழல் தொடர்பான புகார்கள் மீது மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலுவையில் உள்ள புகார்கள் விரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.