September 5, 2026

Seithi Saral

Tamil News Channel

“சுரங்கப்பாதையில் 9 நாள் ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரத்தை உச்சரித்தேன்” மீட்கப்பட்ட தொழிலாளி உருக்கம்

1 min read

“I chanted the ‘Hare Krishna’ mantra for 9 days inside the tunnel,” says rescued worker, moved with emotion.

5.9.2026
நேபாளத்தில் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 9 நாட்களும் ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரத்தை உச்சரித்ததாக மீட்கப்பட்ட தொழிலாளி கூறினார்.

இமயமலை பிராந்தியத்தில் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த மாதம் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கரைபுரண்டு பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகதியும் உள்கட்டமைப்புகளை முற்றிலும் சீரழித்தன. நேபாளம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

நேற்று காலை நிலவரப்படி உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 1300-ஐ தாண்டியிருக்கிறது. 5000க்கும் மேற்பட்டோரை காணவில்லை. இதில் தமிழர்கள் உள்ளிட்ட ஏராளமான இந்தியர்களும் அடங்குவர்.

காணாமல் போனவர்கள் பிழைத்திருக்கும் வாய்ப்பு குறைந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை திரிசூலி 3 ஏ நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் மனித குரல்கள் கேட்பதை மீட்புப்படையினர் கேட்டதும், அவர்களுடன் தகவல் தொடர்பு வசதியை ஏற்படுத்தினர். நேபாள ராணுவத்தினரும், ஆயுத போலீஸ் படையினரும் மீட்புப்பணியைத் துரிதப்படுத்தினர். இதன் பலனாக, நேற்று அந்த சுரங்கத்தில் இருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட 9 நாட்களுக்கு பிறகு அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது அனைவருக்கும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.

மீட்கப்பட்டவர்களில் ஒருவர் கபிர் மகார்ஜன் (வயது 45), அந்த நீர்மின் திட்டத்தின் மெக்கானிக்கல் மேற்பார்வையாளர் என்றும், மற்றொருவர் சஞ்சய் ஷா (30), மேற்பார்வையாளர் என்றும் அடையாளம் காணப்பட்டது. காத்மாண்டு நகரில் உள்ள நேபாள ராணுவ ஆஸ்பத்திரியில் கபிர் மகார்ஜன் அனுமதிக்கப்பட்டார். சஞ்சய் ஷா, நுவகோட்டில் உள்ள திரிசூலி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சஞ்சய் சா, மாதேஷ் மாகாணம் சப்தாரி மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் மீட்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு படையினருடன் சிறிது நேரம் உரையாடினார். அவர் கூறுகையில், “விபத்து நடந்தபோது நான் கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருந்தேன். ஒவ்வொருவர் உயிரையும் காப்பாற்றுவது என் பொறுப்பு. எனவே, சம்பவம் நடந்தவுடன், அங்கிருந்த அனைவரையும் ஓடுமாறு கூறினேன். அவர்கள் தப்பிவிட்டனர். ஆனால் நான் சிக்கிக்கொண்டேன்.

சுரங்கத்துக்குள் சிக்கி இருந்த 9 நாட்களும் ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தேன். அங்கு 3 அல்லது 4 பேர் சிக்கி இருந்தனர். அவர்களுடன் சத்தம் எழுப்பியும், உரையாடியும் தொடர்பை ஏற்படுத்தி இருந்தோம். பவர்ஹவுசை சுற்றி நிறைய பேர் சிக்கி இருக்கலாம். அவர்கள் தப்பி இருக்க வாய்ப்பு இல்லை. வெள்ளத்தின் அழுத்தத்தால் அவர்கள் உள்ளே தள்ளப்பட்டு இருக்கலாம்” என்று கூறினார்.

சஞ்சய் ஷா 9 நாட்கள் சுரங்கத்தில் சிக்கியிருந்த நிலையில், பகவான் கிருஷ்ணரின் அவதாரத் திருநாளில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *