5 மாநில சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வுக்கு ரூ.1,472.8 கோடி கட்சி நிதி
1 min read
5 State Assembly Elections: BJP gets Rs 1,472.8 crore in party funds
9.9.2026
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற காலகட்டத்தில் பா.ஜ.க.வின் மத்திய தலைமையகத்துக்கு ரூ.1,472.8 கோடி கட்சி நிதி வரவாக கிடைத்துள்ளது.
அசாம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களுக்காக பா.ஜ.க.வின் தலைமை, சம்பந்தப்பட்ட மாநில மற்றும் மாவட்ட அமைப்புகள் மூலம் மொத்தம் ரூ.160 கோடியை செலவிட்டுள்ளன.
இதில் அசாமில் அதிக பட்சமாக ரூ.96.3 கோடியும், தமிழ்நாட்டில் ரூ.51.6 கோடியும், புதுச்சேரியில் ரூ.11.9 கோடியும் செலவிடப்பட்டுள்ளன. மொத்த செலவில் ரூ.130.4 கோடி கட்சி பிரசாரத்துக்காக செலவிடப்பட்ட நிலையில், வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை மற்றும் அவர்களின் குற்றப் பின்னணி குறித்த விளம்பரங்களுக்காக ரூ.29.6 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டுக்கான தேர்தல் செலவு கணக்கின் படி, கட்சியின் பொதுப்பிரசாரத்துக்காக மொத்தம் ரூ.44.5 கோடி செலவிட பாஜக அனுமதித்திருந்தது. வேட்பாளர்களுக்காக மேலும் கூடுதலாக ரூ.7 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதில் வேட்பாளர்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்ட தொகை ரூ.6.5 கோடி ஆகவும், ரூ.33 லட்சம் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களை விளம்பரப்படுத்தவும் செலவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுப் பிரசாரத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ.44.5கோடியில், நட்சத்திரப்பேச்சாளர்களின் பயணச் செலவுக்காக ரூ.10 கோடியும், விளம்பரங்களுக்காக ரூ.23.9 கோடியும் செலவிடப்பட்டுள்ளன. விளம்பரப் பொருட்களுக்காக ரூ.5.8 கோடியும், பொதுக்கூட்டங்களை நடத்துவதற்காக ரூ.47 லட்சமும், மாநிலக் கட்டமைப்பின் பிற செலவுகளுக்காக ரூ.4.2 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
அசாமில் பா.ஜ.க. அதிக பட்சமாக ரூ.96.3 கோடி செலவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள கணக்குகளின்படி, அங்கு பொதுப் பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளுக்காக ரூ.76.7 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இதில் பிரசாரத்தில் ஈடுபட்ட நட்சத்திரப் பேச்சாளர்களின் பயணத்துக்காக ரூ.27.3 கோடியும். விளம்பரங்களுக்காக ரூ.37 கோடியும், பிரசாரப்பொருட்களுக்காக ரூ.8.9 கோடியும், பிற செலவுகளுக்காக ரூ.2.3 கோடியும் செலவிடப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கு மொத்தமாக ரூ.19.4 கோடி வழங்கப்பட்டதுடன், அவர்களின் குற்றப் பின்னணியை பொதுவெளியில் அறிவிப்பு வெளியிடுவதற்காகரூ. 16.7லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், மேற்குவங்காளம் மற்றும் கேரளா சட்டசபை தேர்தல்களுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் செலவு கணக்குகள் இன்னும் தேர்தல் ஆணையத்தால் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவில்லை. எனவே, அந்த இரு மாநிலங்களையும் சேர்த்த பா.ஜ.க.வின் மொத்த தேர்தல் செலவு தற்போது முழுமையாக தெரியவில்லை.
இந்நிலையில், 5 மாநில தேர்தல்களுக்காக காங்கிரஸ் கட்சி மொத்தம் ரூ.248.6 கோடி செலவிட்டதாக ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த தேர்தல் செலவு கணக்கில் தெரிவித்திருந்தது.
ஆனால் பா.ஜ.க. தரப்பில் வரவு ரூ.1,472.8 கோடியாகவும், தேர்தல் செலவு ரூ.160 கோடியாகவும் இருப்பது தெரியவந்துள்ளது.