September 9, 2026

Seithi Saral

Tamil News Channel

வடகிழக்கு பருவமழை நடவடிக்கை: தென்காசி ஆட்சியர் ஆய்வு

1 min read

Northeast Monsoon Preparedness: Tenkasi Collector Inspects

9.9.2026

தென்காசி மாவட்டத்தில்
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், ஒவ்வொரு துறை சார்பாகவும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

பொதுப்பணித்துறையினர் முக்கியமாக பருவமழை காலங்களில் தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றிட வேண்டும். தற்போதுள்ள நீர்நிலைகளில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படும் ஆறுகளின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்க வேண்டும். வருவாய் துறையினருடன் இணைந்து, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு எதுவாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் மற்றும் தற்காலிக புயல் பாதுகாப்பு மையங்களான பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக்கூடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபங்களை முன்னதாகவே. ஸ்தலப் பார்வையிட்டு நல்ல நிலையில் உள்ளதா என்றும், மின்வசதி மற்றும் தண்ணீர் வசதி எந்தவித தங்குதடையுமின்றி 24 மணி நேரமும் பயன்படுத்தும் அளவில் தயார் நிலையில் உள்ளதா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

வனத்துறையினர் பருவமழை காலங்களில் பொதுப்பணித்துறையினருக்கு தேவையான சவுக்கு மரங்கள் தயார் செய்து தரவேண்டும். மழைநீர் சூழ்ந்த குடியிருப்புப் பகுதிகளில் சுற்றித் திரியும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளை பிடிப்பதற்கு பாம்பு பிடிப்பவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பருவமழை காலங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் உயிர்களை உடனடியாக காப்பாற்ற தேவையான படகு, மற்றும் நன்கு நீச்சல் தெரிந்த நபர்களை ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். தீயணைப்புத்துறை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஊர்திகளை தயார் நிலையில் வைத்தல், ஒவ்வொரு வாகனங்களையும் பழுது நீக்கி தேவையான பேட்டரி, ஜெனரேட்டர் மற்றும் கைவிளக்கு ஆகியவற்றை சரி செய்து நல்ல நிலையில் இருப்பதை கண்காணிக்க வேண்டும். தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும்.

நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்பினர் பருவ மழை காலங்களில் தொற்று நோயால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்கவைக்கப்படும் பள்ளி வளாகங்களுக்குள் கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். பள்ளி வகுப்பு தரைகளை லைசல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட காலங்களில் சுத்தம் செய்திட வேண்டும். கழிவுநீர் கால்வாய்கள் இல்லாத தெருக்களின் ஓரங்களில் கால்வாய்கள் வெட்டி தெருக்களில் கழிவுநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கிடவும், புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொது மக்களுக்கு உடன் தெரிவித்தல் வேண்டும். கால்வாய்களை தூர்வார உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குடிநீர் சீராக வழங்க வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்.

மருத்துவத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறையினர் பருவமழை காலங்களில் தேவைப்படும் மருந்துகள் அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்கூட்டியே இருப்பு உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே எடுத்தல் வேண்டும். பாதிக்கப்படும் நபர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்க தக்க முன்னேற்பாடுகள் செய்து தயார் நிலையில் இருத்தல் வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஜெனரேட்டர்களின் செயல்பாடுகளை உறுதி செய்ய வேண்டும், ஜெனரேட்டர்களை இயக்க தேவையான அளவு எரிபொருள்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். மருத்துவக் குழு வாகனங்கள் மற்றும் தொடர்புடைய அடிப்படை வசதிகள் அனைத்தையும் நல்ல நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் லைப் ஜாய்க்கட்டுகளை போதுமான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். ஒ.ஆர்.எஸ் (ORS) மருத்துகள் மற்றும் டையோரியா மாத்திரைகள் போதுமான அளவில் இருப்பு வைக்க வேண்டும்.

நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு துறையினர் தேவையான உணவுப் பொருட்கள் மண்ணெண்ணெய் மற்றும் சாக்குகள் போன்றவற்றை போதுமான அளவிற்கு ஒரு மாத கால அளவிற்கு இருப்பு வைத்திருத்தல் மற்றும் அதனை கண்காணித்து அறிக்கை அளித்தல் வேண்டும். உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் போது மழையில் நனையாமல் இருக்கும் வண்ணம் தார்பாய்கள் போட்டு செல்ல வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறை கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்தல் வேண்டும். தேவையான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ளுதல், முக்கியமாக (antibiotics, dextrose, electrolytes and astringents) கால்நடைகளை 24 மணி நேரத்திற்குள் பிரேத பரிசோதனை செய்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசின் நிவாரணத் தொகை உடனடியாக கிடைத்திட ஏதுவாக பரிசோதனை அறிக்கையினை சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் / மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

கல்வித்துறையினர் பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் நல்ல நிலையில் உள்ளதா என்பதனை கண்காணித்து அறிக்கை செய்ய வேண்டும். கட்டிட மேற்கூரை மற்றும் ஜன்னல் மேற்கூரைகளில்
காய்ந்த இலைகளை அகற்றவும். அதனால் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பாதுகாப்பு அற்ற கட்டிடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் உள்ள ஆபத்தான நிலையில் இருக்கும் மரங்களை கணக்கிட்டு அவற்றினை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மரங்களுக்கு மிக அருகில் இருக்கும் பாதுகாப்பற்ற பள்ளி கட்டிங்களை கணக்கிட்டு சரி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி இருப்பு வைத்தல் வேண்டும். உரக்கடைகளில் உரங்களின் இருப்பு விவரங்களை அறிக்கை செய்தல் வேண்டும். பயிர் சேதங்கள் குறித்து வட்டாட்சியர்களுடன் கூட்டுப் புலத்தணிக்கை செய்து குறிப்பிட்ட படிவத்தில் உடனுக்குடன் அறிக்கை செய்ய வேண்டும்.

மின்வாரியத்துறையினர் மின்சார வயர்களில் உரசும் மரக்கிளைகளை அகற்றுவதற்று தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பாத்தியப்பட்ட நீரேற்று நிலையங்களில் மின் இணைப்புகளை துண்டிக்க கூடாது. மின் கம்பங்கள் சாய்ந்தால் விபத்து ஏற்படாதவாறும், அதிக வெள்ளம் ஏற்படும் நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தியும், உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விநியோகத்தை சீர் செய்ய வேண்டும். இயற்கை இடர்பாடுகளின் போது மீட்பு நடவடிக்கைகளுக்கு குழு அமைத்து அதன் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை பிரிவில் சமர்ப்பித்து மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும்.

24 X 7 கால அமைப்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர கால கட்டுப்பாட்டு சேவை மையங்களை உருவாக்க வேண்டும்.பருவமழையினால் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு அறைஎண் 04633-290548, 1077 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்- என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்,
தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பேருந்துகள் அனைத்தையும் நல்ல நிலையில் வைத்திடவும். மேற்கூரைகள் சேதமடைந்த பேருந்துகளை உடனடியாக சரிசெய்திடவும் மற்றும் அவசர காலத்தில் பேருந்துகள் தேவைப்பட்டால் உடன் அனுப்பிடும் வகையில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

வட்டார போக்குவரத்து அலுவலர் பருவ மழைக்காலங்களில் ஏதேனும் பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டால் அப்பகுதிகளுக்கு போக்குவரத்து பாதையினை மாற்றி அமைத்து தடையில்லாத போக்குவரத்து சேவையினை வழங்கிட வேண்டும்.

கருவூல அலுவலர் பருவமழை காலங்களில் இயற்கை இன்னல்களினால் ஏற்படும் மனித உயிரிழப்பு. கால்நடை சேதம் மற்றும் குடிசை சேதங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகைகளுக்கான பட்டியலை காலதாமதமின்றி உடன் அனுமதித்து காசாக்கி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோட்டாட்சியர்கள் / வட்டாட்சியர்கள் / வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மழை மானிகள் அனைத்தையும் பார்வையிட்டு, நல்ல நிலையில் உள்ளதா என்பதனை உறுதிபடுத்தல் வேண்டும். தினசரி காலை 7.00 மணிக்குள் மழை அளவினை கணக்கீடு செய்து மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்கவும். பேரிடர் இழப்புகளை உடனடியாக தெரிவிக்க பணியாளர்களை சுழற்சி முறையில் (24×7) பணியமர்த்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள்நடவடிக்கை எடுத்தல் வேண்டும். வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள VHF சாதனங்களை எப்பொழுதும் உபயோகப்படுத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்கத் தேவையான பொது இடங்களைத் தயார் நிலையில் வைத்தல் வேண்டும். கோட்டாட்சியர்கள் கோட்ட அளவில் / வட்ட அளவில் / வட்டார அளவில் முன்னேற்பாடுகள் கூட்டத்தை நடத்தி எப்போதும் தயார் நிலையில் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். வட்டாட்சியர்கள் வட்ட அளவில் அனைத்து துறைகளையும் இணைத்து குழு அமைத்து குழு கூட்டம் நடத்தி முன்னேற்பாடுகள் தொடர்பாக பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் தணிக்கை செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை செய்ய வேண்டும். பருவமழை ஆரம்பித்த நாள் முதல் சேத அறிக்கைகள் மதியம் 3.00 மணிக்குள் நிகரி / மின்னஞ்சல் மூலம் அனைத்து வட்டாட்சியர்களும், கோட்ட அலுவலகத்திற்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கும் உரிய படிவத்தில் (குடிசை சேதம், மனித இறப்பு. கால்நடை இறப்பு, பயிர் சேதம் விபரங்கள்) அனுப்பப்படல் வேண்டும். கோட்டாட்சியர்கள் தங்களது கோட்டத்திற்குட்பட்ட அறிக்கையினை 4.00 மணிக்குள் நிகரி/மின்னஞ்சல் மூலம் அனுப்புதல் வேண்டும்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக தவியாளர் (நிலம்) சேதுராமன் மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) ராம்குமார், காவல்துறை, பொதுப்பணித்துறை. வனத்துறை, தீயணைப்புத்துறை, நெடுஞ்சாலைத்துறை சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், கோட்டாட்சியர்கள். வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்ட கண்காணிப்பு அலுவலர்கள் உட்பட அனைத்துத்துறை மாவட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *