பாட்டாக்குறிச்சியில் முதலமைச்சர் கோப்பை சதுரங்கப் போட்டி
1 min read
Chief Minister’s Trophy Chess Tournament in Pattakkurichi
9.9.2026
தென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை சதுரங்கப் போட்டி ஜப் நள்ளிரவு வரை நீடித்ததால் மாணவர்கள், பெற்றோர் அவதி அடைந்தனர்.
பாதுகாப்பு, உணவு, குடிநீர் வசதிகள் குறித்து பெற்றோர் அதிருப்தி அடைந்தனர் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை 2026-ன் கீழ் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 130-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளும், 300-க்கும் மேற்பட்ட ஆண் குழந்தைகளும் கலந்து கொண்டனர். போட்டியின் முதல் சுற்று மதியம் 2 மணியளவில் தொடங்கிய நிலையில், பெண்கள் பிரிவில் 7 சுற்றுகளும், ஆண்கள் பிரிவில் 8 சுற்றுகளும் நடத்தப்பட்டன.
இதனால் பெண்கள் பிரிவு போட்டிகள் இரவு 10 மணியளவிலும், ஆண்கள் பிரிவு போட்டிகள் நள்ளிரவு 12 மணியளவிலும் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
சிறு வயது மாணவ, மாணவியர்கள் அதிகளவில் கலந்து கொண்ட போட்டி என்பதால், இவ்வளவு தாமதமான நேரம் வரை போட்டி நடத்தப்பட்டதற்கு பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், போட்டி நடைபெற்ற இடம் காட்டுப்பகுதியை ஒட்டிய பகுதியாகவும், விலங்குகள் நடமாட்டம் உள்ள இடமாகவும் இருப்பதால், இரவு நேரத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அச்சம் தெரிவித்தனர்.
போட்டி முடிவடைந்த பின்னர், பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போதிய பேருந்து மற்றும் போக்குவரத்து வசதி இல்லாமல் இரவு நேரத்தில் தங்களது ஊர்களுக்குச் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, நள்ளிரவு வரை போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு போதுமான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வில்லை என்றும் பெற்றோர் கள் குற்றம்சாட்டியுள்ளனர். நீண்ட நேரம் போட்டியில் விளையாடிய சிறு குழந்தைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் சிரமப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் நடைபெற்ற போட்டிகள் இரவு 7 மணிக்குள் முடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு போட்டி நள்ளிரவு வரை நீடித்தது ஏன் என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முதலமைச்சர் கோப்பை போன்ற அரசு சார்ந்த விளையாட்டு போட்டிகளில் மாணவர்களின் திறமையை ஊக்குவிப்பதுடன், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சிறு குழந்தைகளை நள்ளிரவு வரை போட்டியில் வைத்துவிட்டு, அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான போக்குவரத்து, உணவு மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்யாமல் இருப்பது வேதனை அளிக்கிறது” என பெற்றோர்கள் தெரிவித்தனர்.
எனவே, தென்காசி மாவட்ட முதலமைச்சர் கோப்பை சதுரங்கப் போட்டியில் ஏற்பட்டதாக கூறப்படும் ஏற்பாட்டு குறைபாடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, எதிர்காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சதுரங்க ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.