September 22, 2026

Seithi Saral

Tamil News Channel

சபரிமலையில் அரவணை பிரசாத தட்டுப்பாடு

1 min read

Shortage of Aravana prasadam at Sabarimala

21.9.2026
உற்பத்தியில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, பக்தர்களின் தேவைக்கு ஏற்ப அரவணை பிரசாதத்தை விநியோகிக்க முடியாத இக்கட்டான நிலை திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு ஏற்பட்டுள்ளது.

சபரிமலையில் வழக்கமாக ஒரு பக்தருக்கு தலா 3 டின் அரவணை பிரசாதம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தட்டுப்பாடு காரணமாக தற்போது அது ஒரே ஒரு டின்னாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு டின் பிரசாதத்தைப் பெறுவதற்கும் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கூடுதல் பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள், மீண்டும் மீண்டும் நீண்ட வரிசைகளில் வந்து நின்றதால், அரவணை கவுண்ட்டர்களில் 24 மணி நேரமும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது.

எனினும், பல மணி நேரம் காத்திருந்தும் பிரசாதம் கிடைக்காமல் பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் தங்களது வீடுகளுக்குத் திரும்பினர்.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பக்தர் கூறுகையில்,
“நான் சபரிமலைக்கு பலமுறை வந்துள்ளேன். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் சிறிது நேரம் காத்திருந்து பிரசாதம் பெற்றுச் செல்வது வழக்கம். ஆனால், சபரிமலை வரலாற்றிலேயே முதன்முறையாக பிரசாத தட்டுப்பாடு காரணமாக அரவணை வாங்க முடியாமல் வெறும் கையோடு வீடு திரும்பும் நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது” என மிகவும் வருத்தத்தோடு வீடு திரும்பினார்.

அரவணை தட்டுப்பாடு குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி ஒருவர் விளக்கமளித்துப் பேசியதாவது:-

“சபரிமலையில் அரவணை தயாரிப்பதற்கான புதிய நவீன மையம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாகவே உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டு தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும், இந்த ஆண்டு புரட்டாசி மாத பூஜைக்கு நாங்கள் எதிர்பாராத அளவிற்கு கூடுதல் பக்தர்கள் வருகை தந்ததும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

இருப்பினும், நிலைமையைச் சமாளிக்கக் கூடுதலாக அரவணை தயாரிக்கத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.

இந்த விவகாரம் கேரள அரசுக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்திற்கும் இடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில தேவஸ்தான துறை அமைச்சர் முரளீதரன் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் முரளீதரன் பேசியதாவது:-

“மாத பூஜை காலங்களில், பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று தெரிந்தும் சபரிமலையில் அரவணை உற்பத்தியை நிறுத்தி வைத்து புதிய மையம் அமைக்கும் பணியை மேற்கொண்டது மிகப்பெரிய தவறு.

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் முறையான திட்டமிடல் இல்லாத செயல்பாடுகளே இந்தத் தட்டுப்பாட்டிற்கு முழு முதற்காரணம். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த அரசு உத்தரவிடும்.”

சபரிமலையில் அண்மையில் நடந்த தங்கம் கொள்ளை சம்பவத்தைத் தொடர்ந்து, ஏற்கனவே கேரள அரசுக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்திற்கும் இடையே கொள்கை முரண்பாடுகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவி வரும் சூழலில், இந்த அரவணை தட்டுப்பாடு விவகாரம் அரசு மற்றும் தேவஸ்தானம் இடையேயான மோதலை மேலும் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *