புற்றுநோய் மருந்துகளுக்கு 10 மடங்கு அதிக விலை- உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
1 min read
Supreme Court strongly condemns prices of cancer drugs.
23.9.2026
புற்றுநோய் போன்ற உயிர்காக்கும் மருந்துகளின் விற்பனையில் நடைபெறும் அநியாயமான விலையேற்றம் மற்றும் கட்டுப்பாடற்ற லாப வெறியை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் சில்லறை விற்பனையாளர்களும் நோயாளிகளிடம் நடத்தும் இந்தச் சுரண்டலை “பகல் கொள்ளை” என்று நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மருந்து விலைக் கட்டுப்பாடு தொடர்பான மனுக்களை விசாரித்தபோது இந்த அதிர்ச்சித் தகவலை சுட்டிக்காட்டியது. தயாரிப்பாளர் ஒரு சில்லறை விற்பனையாளருக்கு ரூ.2,700-க்கு வழங்கும் புற்றுநோய் மருந்தை, அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.27,000 என நிர்ணயித்து விற்பனை செய்வதை நீதிபதிகள் கண்டறிந்தனர். சில்லறை விலையை விட 10 மடங்கு அதிகமாக அச்சிட்டு விற்பனை செய்வது அப்பட்டமான பகல் கொள்ளை என்றும், இது நோயாளிகளை வதைக்கும் செயல் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மருந்து விலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மற்றும் மத்திய அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் இதுபோன்ற முறைகேடுகளை கண்டும் காணாமல் அமைதியாக இருப்பது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சாதாரண மற்றும் ஏழை நோயாளிகள் உயிர்காக்கும் மருந்துகளை வாங்க முடியாமல் தங்களது வீடுகள், நிலங்கள் மற்றும் நகைகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்தச் சுரண்டலைத் தடுக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
ஆயுஷ்மான் பாரத் போன்ற மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் சிகிச்சைகளின் போது, இதுபோன்ற அதிகப்படியான MRP விலையிலேயே மருந்துகள் கணக்கிடப்படுகின்றன. இறுதியில் மக்களின் வரிப் பணமே இவ்வாறு தனியார் நிறுவனங்களால் சுரண்டப்படுவதாகவும், இது அரசுப் பணத்தில் நடக்கும் அப்பட்டமான மோசடி என்றும் உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்தது.
மருந்துகளின் உற்பத்திச் செலவு, சில்லறை விற்பனை விலை நிர்ணயம் மற்றும் ஜெனரிக் மருந்துகளின் பயன்பாட்டை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தனது பதிலை அளிக்க வேண்டும் எனக் கூறி, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.