October 1, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய விமானிதான் ‘ரியல் ஹீரோ’ – டிரம்ப், நெதன்யாகு பாராட்டு

1 min read

Indian pilot is the ‘real hero’ – Trump, Netanyahu praise him.

1.10.2026
கத்தியால் குத்தப்பட்ட நிலையிலும், ரத்த வெள்ளத்தில் துணிச்சலாகப் போராடி 180க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட் சுமித் மச்சாரை, ‘ரியல் ஹீரோ’ என அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் பாராட்டியுள்ளனர்.
துபாயில் இருந்து புறப்பட்ட ‘பிளைதுபாய்’, போயிங் 737 ரக விமானத்தில் 180க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விமானம் இஸ்ரேல் எல்லைக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி, திடீரென தலைமை விமானியான இந்தியாவைச் சேர்ந்த சுமித் மச்சாரை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
அத்துடன் விமானத்தின் இயக்கக் கட்டுப்பாட்டு அமைப்புகளை சீர்குலைத்து, விமானத்தை தரையில் மோதி தகர்க்க சதி செய்துள்ளார். ​இதனால் நிலைகுலைந்த விமானம், வெறும் ஒரு நிமிடத்திற்குள் சுமார் 14,000 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே பாய்ந்து சுழன்றடிக்கத் தொடங்கியது. பயணிகள் பயத்தில் அலறினர்.​
கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் பலத்த கத்திக் குத்துக் காயங்கள் அடைந்த நிலையிலும், கேப்டன் சுமித் மச்சார், சற்றும் தளராமல் சண்டை போட்டு, காக்பிட் கதவைத் திறந்து உதவிக்காகக் கூச்சலிட்டார். கதவு திறந்ததும், விமானத்தில் இருந்த இஸ்ரேலியப் பயணி ஒருவரும், விமானப் பணிக்குழுவினரும் துரிதமாக செயல்பட்டு, கத்தியுடன் நின்ற துணை விமானியைத் தாக்கி மடக்கிப் பிடித்தனர்.
துணை விமானியை பிடித்த இஸ்ரேலியப் பயணி ஒரு பிளம்பர். அவர் விமானத்தை ஓட்டிய முன் அனுபவம் இல்லாதவர் என்றாலும், விபரீதத்தை உணர்ந்து அங்கு விரைந்து, மற்றொரு பணிக்குழுவினருடன் இணைந்து நிலைதடுமாறி விழுந்த விமானத்தை சாதுரியமாக நிமிர்த்தி நிலைநிறுத்த உதவினார்.
​இதையடுத்து, விமானம் உடனடியாக சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் 180 பயணிகளும் நூலிழையில் உயிர் தப்பினர். காயமடைந்த இந்திய பைலட் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபரீத சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘இந்திய விமானி ஸ்மித் மச்சார் ஒரு உண்மையான ஹீரோ. உயிருக்கு ஆபத்தான நிலையிலும் அவர் காட்டிய அசாத்திய தைரியமும் சமயோசித புத்தியும் பெரும் பேரழிவைத் தடுத்துள்ளது. அவருடன் இணைந்து போராடிய வீரர்களுக்கும் எனது சல்யூட்’ எனப் பாராட்டினார்.
​அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்திய விமானி உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய ஹீரோ. சக விமானி கத்தியால் தாக்கியபோதும் துணிச்சலாகப் போராடி கதவைத் திறந்துள்ளார். மேலும், விமானத்தை ஓட்டிய அனுபவமே இல்லாத ஒரு பிளம்பர் துணிச்சலாகச் செயல்பட்டு விமானத்தை நிலைநிறுத்த உதவியுள்ளார். நடுவானில் மாபெரும் துயரம் தவிர்க்கப்பட்டுள்ளது,’ எனத் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *