October 1, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

1 min read

Sexual assault on minor girl in Nellai: Culprit sentenced to 7 years in prison.

1/10/2026
நெல்லை மாநகரில் ஒரு சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரத்தில் கடந்த 2024-ம் ஆண்டு இஸ்ரவேல் செல்வசேகர் என்பவர் ஒரு சிறுமியிடம், பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் 20.1.2024 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அப்போதைய பாளை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, இஸ்ரவேல் செல்வசேகரை கைது செய்தார்.

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று (30.9.2026) குற்றவாளிக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

நீதிபதி சுரேஷ்குமார் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டும் தீர்ப்பளித்தார்.

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) சரவணன், உதவி கமிஷனர் சிவசக்தி (பாளையங்கோட்டை சரகம்), பாளை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நாககுமாரி, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற காவலர் ரேணுகா, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை பாராட்டினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *